சினிமா

நடிகர் விஜயகுமாரின் குடும்பம்

Published On 2017-02-20 22:53 IST   |   Update On 2017-02-20 22:53:00 IST
நடிகர் விஜயகுமார் குடும்பம் பெரியது. அவருக்கு 5 மகள்கள்; ஒரு மகன்.
நடிகர் விஜயகுமார் குடும்பம் பெரியது. அவருக்கு 5 மகள்கள்; ஒரு மகன்.

விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

"அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

Similar News