சினிமா

பெரியார் படத்தயாரிப்பு அரசு நிதி உதவி கிடைத்தது எப்படி? "நாங்களே எதிர்பார்க்காமல் கலைஞர் வழங்கினார்'' - சத்யராஜ்

Published On 2016-08-31 18:13 GMT   |   Update On 2016-08-31 18:13 GMT
"பெரியார்'' படத்துக்கு அரசின் நிதி உதவி கிடைத்தது எதிர்பாராத ஒன்று என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.


"பெரியார்'' படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

"1967-ல், தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நேரத்தில், ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த அண்ணா, திருச்சியில் உள்ள "பெரியார் மாளிகை''யில் தனது அமைச்சரவை சகாக்களுடன் சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவத்தை, அதே பெரியார் மாளிகையில் படமாக்கியபோது, படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே உணர்ச்சிமயமாகி

இருந்தோம்.அண்ணாவாக, நாவலராக, பேராசிரியராக, கலைஞராக என்று தலைவர்களின் அன்றைய தோற்றத்துக்கு பொருத்தமானவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார், இயக்குனர் ஞானராஜசேகரன். இப்படி தலைவர்கள் வருகிற காட்சி படமாகும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பெயரைச் சொல்லாமல் அவர்கள் ஏற்றிருந்த தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே நடிப்பதற்கு அழைத்தார்கள். குறிப்பாக அண்ணாவாக நடித்தவர் டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி. `ஷாட்' ரெடியானதும் அவர் பெயரைச் சொல்லாமல், "அண்ணாவை வரச்சொல்லுங்க'' என்பார், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான். இப்படி அழைத்தது அந்த சூழ்நிலைக்கு இன்னும் கனம் சேர்த்தது.

வயது முதிர்ந்த காலகட்டத்தில் பெரியாரை அடிக்கடி புரட்டியெடுத்த நோய் வயிற்று வலி.

மேடையில் உட்கார்ந்த நிலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென இந்த வயிற்றுவலி வந்து விடும் என்றார்கள். சிறுநீர்பையில் இருந்து நீர் பிரிவது சிரமமாக இருக்கவே ஒரு டிïப் இணைத்திருக்கிறார்கள். என்றாலும் சிறுநீர் பிரியும்போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பெரியாரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்திருக்கிறது. பல நேரங்களில் இந்த வலி தாங்காமல் மேடையிலேயே உருண்டு புரண்டிருக்கிறார்.

இப்போது, பெரியாராக நானே அந்த வலியை நடிப்பில் கொண்டுவர வேண்டிய கட்டாயம். அதனால், இப்படி பெரியாரின் வயிற்றுவலி வேதனையை நேரில் பார்த்த தொண்டர்கள் யாராவது சொன்னால் அதை முடிந்தவரை என் நடிப்பிலும் கொண்டு வரமுடியும் என்று எண்ணினேன்.

ஆனால், நான் எதிர்பார்த்த மாதிரி அப்படியொரு தொண்டர் எனக்குக் கிடைக்கவில்லை. ஆசிரியர் வீரமணியிடம் இதுபற்றி கூறினேன். "உங்களுக்கு தெரிந்த தொண்டர் இருந்தால் சொல்லுங்கள். அவர் சொல்வதை என் நடிப்பில் கொண்டு வருகிறேன்'' என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும், ஆசிரியர் வீரமணி என்னிடம், "என்னைவிட பெரியாரின் தொண்டர் வேறு யாருங்க?'' என்று கேட்டார். "தந்தை பெரியாரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு பெற்ற தொண்டன் என்ற முறையில், பெரியாரின் வயிற்று வலியும், அதற்காக அவர் துடித்த துடிப்பும் நான் அறிவேன்'' என்றவர், அப்போதே பெரியாரின் வயிற்று வலி காட்சிகளை கண்முன் கொண்டு வந்தார்.

அறையில் அவர் வயிற்று வலிக்காக உருண்டு புரண்டு வேதனையை வெளிப்படுத்தியது நடிப்பு என்றாலும், என் கண்கள் கலங்கிப் போயின. மக்களின் அறியாமை இருளை அகற்ற வந்த பகலவன், தன் வேதனைகளை தாங்கிக்கொண்டு மக்களுக்காக பாடுபட்டாரே, எப்படிப்பட்ட மக்கள் தலைவர் அவர்'' என்று எண்ணியபோது, என் கண்கள் கலங்கிவிட்டன.

சிறுவயதில் இருந்தே வசதியாக வாழ்ந்து பழகியவன் நான். எனக்கு ஏழ்மை பற்றி தெரியாது. நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புக்காக பல இடங்களுக்கும் பஸ்சில் போக நேர்ந்தபோதுதான், நடுத்தர வர்க்கம், அதற்கும் கீழே ஒரு வர்க்கம் என மக்களின் பொருளாதாரப் போராட்டம் புரிய ஆரம்பித்தது.

ஆனால், என்னைவிட பலமடங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெரியார், தன்னை வருத்திக்கொண்டு மக்களின் மூடநம்பிக்கைகள் அகல்வதற்காகப் போராடினாரே, அந்த போராட்ட குணம்தான் அவரை உயர்த்தியிருக்கிறது.

என் தந்தையாக நடிக்கும் சத்யநாராயணா (இவர் தெலுங்கில் பெரிய நடிகர்) வெங்காயமண்டியில் என்னை செருப்பால் அடிக்கிற காட்சியில், என்னை அடிக்க மறுத்துவிட்டார். படத்தில் மிக முக்கியமான காட்சி அது. டைரக்டரும், கேமராமேனும் எவ்வளவோ சொல்லியும், செருப்பை தூக்கிய அவரது கை, என் மீது படாமல் அப்படியே அசைவற்று நின்றது!

அவர் தயங்குவதைப் பார்த்ததும், எனக்கு பயம் வந்துவிட்டது. "சத்யநாராயணா சார்! தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் இது. பெரியாரின் தந்தை தன் மகனை செருப்பால் அடிக்கிறார். எனவே `நடிப்பு' என்பதை மறந்துவிட்டு நிஜமாகவே அடியுங்கள். ஆனால் ஒரே `டேக்'கில் சரியாக அடித்து விடுங்கள். அடுத்தடுத்து செருப்பு அடி வாங்கினால், என் உடம்பு தாங்காது'' என்றேன்.

அப்படியும் அவர் தயங்கி, பிறகு வேறு வழியின்றி நடித்தார். அதாவது என்னை செருப்பால் அடித்தார்! ஒரே `டேக்'கில் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததால், என் கன்னம் அதிக சேதாரமின்றி தப்பியது!

படம் வளரத் தொடங்கியபோது செலவைப்பற்றி தயாரிப்பு தரப்பு கவலைப்படவேயில்லை.

பெரியார் சென்று வந்த ரஷியாவிற்கு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றதும் உடனே பயண ஏற்பாடு செய்தார்கள். பெரியாரின் ரஷிய அனுபவங்களை ரஷியாவிலேயே தங்கி படம் பிடித்தோம்.

ஆங்கிலமே தெரியாத - பேசாத ஒரு நாடு ரஷியா. தங்கள் தாய்மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாய்மொழிக்கான மரியாதை நம்மிடையே குறைந்து வருவதை அங்கே இருந்த நாட்களில் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேதனைதான் மிஞ்சியது.

மக்கள் தலைவர் பற்றிய படம் என்பதால், அரசிடம் உதவி கேட்கலாம் என்று நட்பு முறையில் சில யோசனை கூறினார்கள். ஆனால், கேட்காமலேயே பெரியார் படத்துக்கு 95 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு சார்பில் வழங்கினார், முதல்வர் கலைஞர். காரைக்குடியில் நடிகை ரகசியாவின் நடனக்காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் வீரமணியிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர்தான் இந்த சந்தோஷத் தகவலை முதன் முதலாக என்னிடம் சொன்னார்.

"பெரியார்'' படத்துக்கு, அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் கலைஞர், "மகன், தந்தைக்குச் செய்யும் உதவி'' என்று ஒரே வரியில் பதில் சொல்லி, கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.படத்தைப் பார்த்தார்

படம் முடிந்து ஏவி.எம். ஏ.சி. தியேட்டரில் `டபுள் பாசிடிவ்' பார்த்தார் கலைஞர். பின்னணி இசை, எடிட்டிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் `டபுள் பாசிடிவ்' 4ஷி மணி நேரம் வரை திரையில் ஓடும்.

அதை பொறுமையாய் கலைஞர் பார்த்து முடித்தபோது, இரவு 11 மணி. படம் முடிந்ததும் உடனே அவர் வீட்டுக்குப் போகவில்லை. ஏ.சி. தியேட்டருக்கு வெளியே நின்று, காட்சிகள் பற்றி ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கிறார். தியேட்டருக்கு வெளியே கொசுக்கள் தொல்லை வேறு. கொசுக்கடியையும் தாங்கிக்கொண்டு, படம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவர் வீட்டில் இருந்து துணைவியார் போன் வந்தது. "சாப்பிட வரவில்லையே'' என்பது போன் வழிச்செய்தி. "வந்துவிடுகிறேன்'' என்றார் முதல்வர். அதோடு, "பெரியார் படம் பார்க்க வந்தேன். படம் முடிந்து இயக்குனர் ஞானராஜசேகரன், வீரமணி, வைரமுத்து, சத்யராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்'' என்ற தகவலையும் தெரிவித்தார்.

தன் சாப்பாட்டு நேரத்தைக்கூட துறந்து, "பெரியார்'' நினைவுகளுடன் ஐக்கியமாகி விட்டார், கலைஞர். நாங்கள்தான் `பசியோடு இருக்கிறீர்கள்' என்று நினைவூட்டி அவரை அனுப்ப வேண்டியதாயிற்று. அவர் புறப்படும்போதுகூட, "படத்தில் பெரியாரின் இறுதி ஊர்வலக் காட்சியை சேர்க்க மறந்து விடாதீர்கள். அதை சேர்த்தால்தான் சிறப்பாக இருக்கும்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

"பெரியார்'' படம் வரும்போது மட்டுமின்றி, பெரியார் காலமானபோதும் அவர்தான் முதல்வர். பெரியார் காலமான தகவல் முதல்வர் கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டதும், அரசு மரியாதைக்கு உத்தரவிட்டார். அப்போதிருந்த தலைமைச் செயலாளர், "பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவர். அவருக்கு அரசு மரியாதை கொடுக்க அரசு விதிகளில் இடமில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்போதும்கூட கலைஞர் விடவில்லை. "தேசத்தந்தை என்று நாம் கொண்டாடும் மகாத்மா காந்தி எந்த அரசு பதவி வகித்தார்? அவர் இறந்தபோது, அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையா? சமூக சிந்தனையாளராய் மக்களின் மூடப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வாழ்நாளை அர்ப்பணித்த பெரியாருக்கு `அரசு மரியாதையுடன் அடக்கம்' என்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றால், அதற்காக என் பதவி போனால் கூட கவலையில்லை'' என்று சொல்லிவிட, அதன்பிறகே பெரியாரின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடந்து முடிந்தது.

பெரியார் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் பெரியாராக நடித்த சந்தோஷத்தை திரும்பவும் பெற்றேன். ஆசிரியர் வீரமணி கொடுத்த பெரியாரின் மோதிரத்தை என் விரலில் அணிவித்த கலைஞர், "பெரியாராக நடித்த தம்பி சத்யராஜ×க்கு எனக்கே கிடைத்திராத பெரியாரின் இந்த மோதிரத்தை பொறாமையுடன் வழங்குகிறேன்'' என்று சொல்லி பெரியார் மீதான அவரது பற்றை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, முதல் திரைப்படமாக ஒளிபரப்பானதும் "பெரியார்'' படம்தான். இதுவும் பெரியார் மீதான கலைஞரின் அன்பை - மரியாதையைத்தான் வெளிப்படுத்தியது.

நான் வில்லனாக நடித்த "சட்டம் என் கையில்'' படத்துக்கும் எனக்கு விருது வழங்கியது கலைஞர்தான். நான் `பாலைவன ரோஜாக்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது விருது வழங்கியதும், பெரியார் படத்தில் நடித்ததற்காக விருது வழங்கியதும், `எம்.ஜி.ஆர். விருதை' வழங்கியதும் கலைஞர்தான். கடந்த ஆண்டு எனக்கு `பெரியார் விருது' வழங்கியதும் அவர்தான்.

இப்படி என் நடிப்புலக வாழ்வில் கிடைத்த அத்தனை பெரிய விருதுகளும் கலைஞர் மூலம் கிடைத்திருப்பது எனக்கு காலம் கொடுத்த மிகப்பெரிய கொடை.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Similar News