சினிமா

வேலை கிடைச்சிடுச்சு படத்தில் சத்யராஜ் - கதாநாயகன், சரத்குமார் - வில்லன்

Published On 2016-08-19 17:51 GMT   |   Update On 2016-08-19 17:52 GMT
பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர்.
பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர்.

பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். "பொன்மனச் செம்மல்'' படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.

டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.

பிரபுவை வைத்து "சின்னத்தம்பி'' படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.

"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார்.

இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், "சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது'' என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். "ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், "உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்'' என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.

சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம்.

"வேலை கிடைச்சிடுச்சு'' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம்.

தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்

சொல்லியனுப்பினார்.  ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. "எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது'' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.

வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.

படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, "மீண்டும் உங்கள் சத்யராஜுக்கு வேலை கிடைச்சிடுச்சு'' என்று குறிப்பிட்டார்!

இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.

சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.

தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை'' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.

அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், "உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?'' என்று கேட்டார்.  எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.

படம் இந்தியில் மட்டுமின்றி, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு இரண்டிலுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் தயாரிப்பதற்கு பட அதிபர்கள் முன் வந்தார்கள். எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார், பி.வாசு. அவரும் விழாவுக்கு தலைமை தாங்கி படத்தையும், டைரக்டரையும் மனம் விட்டுப் பாராட்டினார்.

டைரக்டர் மணிவண்ணனுக்குப் பிறகு என் நடிப்பில் பல வெரைட்டியான விஷயங்களை கொண்டு வந்தவர் பி.வாசு. சீரியஸ் படமான "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் என்னை நடிக்க வைத்தவர், அடுத்து என்னை நடிக்க வைத்த "நடிகன்'' படத்திலோ ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்
மாதிரியான காட்சிகள் வைத்தார். `ஒரு காமெடி படத்துக்கு இவ்வளவு செலவா?' என்று தயாரிப்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்திய படமும் இதுதான். படத்தை தயாரித்த என் மானேஜர் ராமநாதனுக்கு, "நடிகன்'' படத்தின் மீது அத்தனை நம்பிக்கை.

எப்போது பார்த்தாலும் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த படங்கள், எனக்குத் தெரிந்து தமிழில் 3 படங்கள். முதல் படம் டைரக்டர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை'' இப்போது பார்த்தாலும் ஆச்சரியப்படுத்தும் காட்சியமைப்புகள், அதில் சிரிப்பதற்கான இயல்பான இடங்கள் என்று ஸ்ரீதர் பிரமாதப்படுத்தியிருந்தார். அப்பா டி.எஸ்.பாலையாவுக்கு மகன் நாகேஷ் கதை சொல்கிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியுமா? இந்தப் படத்துக்குப் பிறகு அப்படியான பெருமை பி.வாசு இயக்கத்தில் நான் நடித்த "நடிகன்'' படத்துக்கும், கார்த்திக் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா'' படத்துக்கும் இருக்கிறது என்பேன்.

Similar News