சினிமா

200 படங்களுக்கு மேல் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன்

Published On 2016-06-25 22:14 IST   |   Update On 2016-06-25 22:14:00 IST
ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, சின்னத்திரை ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். 45 வருடங்களுக்கு முன் நாடகத்தில் அடியெடுத்து வைத்த அவர், 35 ஆண்டு காலமாக சினிமாவில் நடித்து வருகிறார்.
ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, சின்னத்திரை ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். 45 வருடங்களுக்கு முன் நாடகத்தில் அடியெடுத்து வைத்த அவர், 35 ஆண்டு காலமாக சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 200-க்கு மேல்.

ஒய்.ஜி.மகேந்திரன் 1950-ல் பிறந்தார். தந்தை ஒய்.ஜி.பார்த்த சாரதி நாடகக் கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தாயார் திருமதி ஒய்.ஜி.பி. (ராஜலட்சுமி) மிகச்சிறந்த கல்வியாளர்.

ஒய்.ஜி.பார்த்தசாரதி, தன் நண்பர் பட்டுவுடன் சேர்ந்து "யு.ஏ.ஏ'' நாடகக்குழுவை 1952-ல் தொடங்கினார். அப்போது மகேந்திரனுக்கு வயது 2. இந்த இரண்டு வயதிலேயே, நாடகம், ஒத்திகை, வசனம் என்ற சூழ்நிலையில் வளர்ந்தார். இதுவே, அவர் பிற்காலத்தில் நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்க அஸ்திவாரமாக அமைந்தது.

மகேந்திரன் நடிப்பில் மட்டுமல்ல; படிப்பிலும் திறமைசாலி. "எம்.பி.ஏ'' பட்டம் பெற்றவர். பட உலகில் உள்ள, விரல் விட்டு எண்ணத்தக்க படிப்பாளிகளில் இவரும் ஒருவர்.

மகேந்திரன் முதன் முதலாக 1961-ல் "பெற்றால்தான் பிள்ளையா'' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம்தான் பிறகு சிவாஜிகணேசன் நடிப்பில், "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக வந்தது.

தான் நடித்த நாடகம் படமானதால், படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், சினிமாவுக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நாடகத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், நடிப்பில் இவர் முன்னேற வேண்டும் என்பதில் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அம்மாவுக்கோ, இவர் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று ஆசை.

"நாளைக்குப் பரீட்சை. நன்றாகப் படி'' என்று மகனிடம் திருமதி ஒய்.ஜி.பி. சொல்லிவிட்டுப் போவார். மறு நிமிடமே அப்பா ஒய்.ஜி.பி. வந்து, "டேய்! நாளைக்கு நாடகம் இருக்கு. சரியா ஐந்து மணிக்கு வந்துவிடு!'' என்று சொல்வார்.

படித்துக் கொண்டிருக்கும்போதே, மகேந்திரன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அப்போது, மவுலியும் இவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். "தமிழக லாரல்-ஹார்டி'' என்று கூறும் அளவுக்கு, நகைச்சுவை இரட்டையர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள்.

"பிளைட்-172'' நாடகத்தில் அறிமுகமான இந்த நகைச்சுவை இரட்டையர்கள் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'', "பத்ம விïகம்'' போன்ற நல்ல நாடகங்கள் மூலமாக, மேலும் புகழ் பெற்றனர்.

மகேந்திரனுக்கு நடிகர் "ஏ.ஆர்.எஸ்'' நிறைய வாய்ப்பளித்து, அவர் நடிப்புக்கு மெருகேற்றினார்.

"நலந்தானா?'' என்ற நாடகத்தில் மகேந்திரன் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

"நலந்தானா'' நாடகத்தில், மகேந்திரன் நடித்தது "அரைக்கிறுக்கு'' ("செமி லூஸ்'') கேரக்டர். பிரமாதமாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.

இந்த நாடகத்தில் ஏ.ஆர்.எஸ்.சும் உண்டு. அலுவலக வேலைகள் காரணமாக, அவர் சில நாட்கள் நடிக்க இயலவில்லை. அப்போது அவர் வேடத்தை நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்று நடித்தார்.

அந்தச் சமயத்தில், மகேந்திரனின் நடிப்பை அவர் பார்த்தார். அந்த நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. பட அதிபர் "கலாகேந்திரா'' கோவிந்தராஜனிடம், மகேந்திரன் நடிப்பைப் பற்றி கூறினார். "அரைக்கிறுக்கு ரோலில், மகேந்திரன் அசத்துகிறார்'' என்று புகழ்ந்தார்.

அந்த சமயத்தில், கே.பாலசந்தர் டைரக்ஷனில் "நவக்கிரகம்'' என்ற படத்தை கலாகேந்திரா தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில், அரைக்கிறுக்கு வேடத்தில் நடிக்க ஒரு நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள்.

மகேந்திரன் பற்றி பாலசந்தரிடம் "கலாகேந்திரா'' கோவிந்தராஜன் சொல்ல, அவர் மகேந்திரனை அழைத்துப்பேசினார். தான் சிந்தித்து வைத்திருக்கும் அரைக்கிறுக்கு ரோலுக்கு, மகேந்திரன் பொருத்தமானவர் என்று முடிவு செய்தார்.

மகேந்திரனும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்தார்.

"நவக்கிரகம்'' 3-9-1970-ல் வெளிவந்து, மகேந்திரனுக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது.

பாலசந்தர் டைரக்ஷனில் முதல் படம் அமைந்தது குறித்து, மகேந்திரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. "மோதிரக்கையால் குட்டுப்பட்டதால், சினிமாத்துறையில் முன்னேற முடிந்தது'' என்று கூறுகிறார்.

"நவக்கிரகம்'' வந்த பிறகு, நாடகம், சினிமா இரண்டிலும் "பிசி'' ஆனார், மகேந்திரன். நாடகம் இல்லாதபோது சினிமா, சினிமா இல்லாதபோது நாடகம் என்று இரட்டைக் குதிரைகளிலும் திறமையாக சவாரி செய்தார்.

Similar News