சினிமா

சிறந்த படமாக அச்சாணி தேர்வு: பரிசு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது

Published On 2016-06-23 22:42 IST   |   Update On 2016-06-23 22:42:00 IST
காரைக்குடி நாராயணன் தயாரித்து இயக்கிய "அச்சாணி'' படம், தமிழக அரசின் பரிசைப் பெற்றது. எனினும் பரிசை வழங்குவதில், எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு அகன்றது.
நாராயணனின் புகழ் பெற்ற மேடை நாடகம் "அச்சாணி.'' சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நடித்த இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் உரிமையை பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் வாங்கி அதே பெயரில் மலையாளத்தில் சினிமாவாகத் தயாரித்தார். பிரேம் நசீர், சுஜாதா நடித்தனர். இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.

காரைக்குடி நாராயணன் சொந்தமாகப் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, "அச்சாணி'' கதையைத்தான் தேர்வு செய்தார். இந்தக் கதையை ஏற்கனவே மலையாளத்தில் தயாரிக்க வின்சென்ட்டிடம் விற்று விட்டதால், அதன் உரிமை அவரிடம்தான் இருந்தது. எனவே, காரைக்குடி நாராயணன் ரூ.25 ஆயிரம் கொடுத்து, தன் கதையின் உரிமையை தானே வாங்கி, தமிழில் எடுத்தார்!

இந்தப்படத்தில் முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்தனர். ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார். படம் 1978 பிப்ரவரி 4-ந்தேதி ரிலீஸ் ஆயிற்று. படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்திற்கு தமிழக அரசின் 1978-ம் ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தார்.

பரிசு அறிவிக்கப்பட்ட மறுநாளே, "இந்தப் பரிசை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு, நாராயணனுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

"அச்சாணி கதை, மலையாள படத்தின் கதை. அதை காப்பி அடித்து நாராயணன் தமிழில் தயாரித்திருக்கிறார். எனவே, பரிசு தரக்கூடாது'' என்று, அரைகுறை ஆசாமி ஒருவர் அரசுக்கு புகார் மனு அனுப்பியதே இதற்குக் காரணம்.

இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த நாராயணன், அரசு தலைமைச் செயலாளரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினார். "அச்சாணி கதை, நீங்கள் எழுதியதுதான் என்பதை, ஆதாரத்துடன் 24 மணி நேரத்தில் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால், நீங்கள் பரிசு பெறலாம்'' என்று அரசு தலைமைச் செயலாளர் கூறினார்.

"24 மணி நேர கெடு''வை, ஒரு சவாலாகவும், தன்மானப் பிரச்சினையாகவும் எடுத்துக்கொண்டார், நாராயணன். "எனக்கு லட்சம் பெரிதல்ல; லட்சியம்தான் பெரிது. எப்படியும் தங்களிடம் விருது பெறுவேன். இது நிச்சயம்'' என்று எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.

"அச்சாணி'' நாடகமாக நடந்தபோது, அதை பார்த்து சிறந்த நாடகமாகத் தேர்வு செய்த நீதிபதி வழங்கிய சான்றிதழ், நல்லவேளையாக நாராயணனிடம் இருந்தது. அதை அரசு தலைமைச் செயலாளரிடம் கொடுத்தார்.

அத்துடன் அப்போது அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து ஆகியோரும், "அச்சாணி, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம்தான்'' என்பதை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தனர்.

மறுநாள் அரசிடம் இருந்து, நாராயணனுக்கு அழைப்பு வந்தது. முதல் அமைச்சரிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும்படி அதில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி மறுநாள், எம்.ஜி.ஆரிடம் இருந்து விருதை பெற்றார்.

எம்.ஜி.ஆர். புன்சிரிப்புடன் விருதை நாராயணனிடம் கொடுத்து, அவரை அன்புடன் தட்டிக் கொடுத்தார்.

விருது வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை, மகிழ்ச்சிகரமாக முடிந்தது.

"மீனாட்சி குங்குமம்'' படத்தை நாராயணன் தயாரித்தபோது, கவிஞர் கண்ணதாசனை அணுகி ஒரு பாடல் எழுதித் தரும்படி கேட்டார். அவரும் சம்மதித்து எழுதித் தந்தார்.

"உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?'' என்று கேட்டார், நாராயணன். "நான் கேட்பதை உன்னால் தரமுடியாது; நீ கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்'' என்றார், கண்ணதாசன்.

"பட பூஜைக்கு தாங்கள் அவசியம் வரவேண்டும்'' என்று நாராயணன் கேட்க, "எத்தனை மணிக்கு பூஜை?'' என்று என்று கவிஞர் கேட்டார்.

"அதிகாலை 6.40 மணிக்கு என்றதும், அவர் சிரித்தார். "அதிகாலையை நான் பார்த்ததே இல்லை! வர முயற்சிக்கிறேன்'' என்றார்.

பூஜை நேரத்துக்கு, கவிஞர் காரில் வந்து இறங்கியதைப் பார்த்து, அனைவரும் வியந்தனர்.

"எங்கள் படத்துக்கெல்லாம் நீங்கள் இப்படி அதிகாலையில் வருவதில்லையே! நாராயணன் படத்துக்கு மட்டும் வந்திருக்கிறீர்களே!'' என்று அருகில் இருந்த ஏவி.எம்.சரவணன் கேட்டார்.

உடனே கண்ணதாசன், காரைக்குடியில் இருந்து கலை உலகுக்கு வந்தவர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொன்னார். "இவ்வளவு பேர் காரைக்குடியில் இருந்து வந்திருக்கிறோம். யாராவது, பெயருக்கு முன்னால் ஊர் பெயரை வைத்துக் கொண்டோமா? அவன்தானே ஊர் பெயரை போட்டு, பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறான்! அதனால்தான் வந்தேன்'' என்றார்.

Similar News