சினிமா
ரஜினிகாந்துடன் குதிரை சவாரி செய்தபோது அம்பிகாவுக்கு ஏற்பட்ட விபத்து
நடிகை அம்பிகா "மாவீரன்'' படத்தில் குதிரை சவாரி செய்தபோது விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்.
நடிகை அம்பிகா "மாவீரன்'' படத்தில் குதிரை சவாரி செய்தபோது விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்.
சிவாஜிகணேசனுடன், "வாழ்க்கை'' (1984) படத்தில் வயதான தோற்றத்தில் நடித்ததால், "இனி அம்மா வேடத்தில் தான் நடிக்க வேண்டி இருக்கும்'' என்று சிலர் அம்பிகாவை பயமுறுத்தியது, தவறாக முடிந்தது. ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், மோகன் என்று இளம் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். அதுமட்டுமல்ல; தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார்.
தென்னிந்திய மொழிகளில் அம்பிகா புகழ் பெற்று விளங்கிய அதே காலக்கட்டத்தில், அவர் தங்கை ராதாவும் கொடிகட்டிப் பறந்தார். லலிதா - பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர், தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நட்சத்திர சகோதரிகளாக அம்பிகாவும், ராதாவும் விளங்கினர். "எங்கேயோ கேட்ட குரல்'', "வெள்ளை ரோஜா'', "இதயக்கோவில்'', "மனக்கணக்கு'', "காதல் பரிசு'', "தாம்பத்யம்'', "அண்ணாநகர் முதல்தெரு'' முதலான படங்களில், இந்த சகோதரிகள் சேர்ந்து நடித்தனர்.
ரஜினிகாந்துடன் அம்பிகா நடித்த படங்களில் "படிக்காதவன்'' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சிவாஜிகணேசனும் நடித்தார். அவர், ரஜினிக்கு அண்ணனாக நடித்தார்.
அம்பிகாதான் ரஜினிக்கு ஜோடி. அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. நிறை கர்ப்பிணிபோல வேடம் போட்டு, வயிற்றில் சாராய பாட்டில்களை மறைத்துக் கடத்தும் வேடத்தில் திறமையாக நடித்து, ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றார்.
ரஜினியுடன் அம்பிகா நடித்த "நான் சிகப்பு மனிதன்'', "மிஸ்டர் பாரத்'' ஆகிய படங்களும், கமலுடன் நடித்த "விக்ரம்'', "காதல் பரிசு'', "காக்கிச்சட்டை'' ஆகிய படங்களும் பெரிய வெற்றிப்படங்கள். சிவகுமாருடன் "கற்பூரதீபம்'', விஜயகாந்துடன் "தண்டனை'', சத்யராஜுடன் "மக்கள் என் பக்கம்'' ஆகிய படங்களில் அம்பிகா நடித்தார். "மாவீரன்'' படத்தில் நடிக்கும்போது, அம்பிகா பெரிய விபத்தில் சிக்கி தப்பினார். இந்தப் படத்தில் வரும் "நீ கொடுத்ததை தருவேன்'' என்ற பாடல் காட்சி, மைசூரில் படமாக்கப்பட்டது. ரஜினிகாந்த் வேகமாக குதிரையில் செல்லும்போது, அம்பிகாவையும் தூக்கி குதிரையில் உட்கார வைத்துக்கொண்டு போவார்.
அப்போது நடந்த விபத்து பற்றி அம்பிகா குறிப்பிடுகையில், "நைலான் துணியில் தைத்த உடையை எனக்கு கொடுத்திருந்தார்கள். குதிரையில் ஏறியபோது, துணி வழுக்கி நான் கீழே விழுந்துவிட்டேன். குதிரை சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது. நல்லவேளையாக, காயத்துடன் தப்பினேன்'' என்றார். இதேபோல, "கடல் மீன்கள்'' படப்பிடிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்தபோதும், குதிரையில் இருந்து விழுந்துவிட்டார்.
தன் திரை உலக அனுபவங்கள் பற்றி அம்பிகா கூறியதாவது:-
"என்னை `ஐ.ஏ.எஸ்' ஆக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். சட்டம் பயில வேண்டும் என்பது என் விருப்பம். சினிமாவுக்கு வராமல் இருந்தால், வக்கீலாகியிருப்பேன். சினிமா நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன். மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால், இதே குடும்பத்தில், இதே பெற்றோருக்கு மகளாக, இதே சகோதரிகளுடன் பிறக்கவேண்டும்; இதே மாதிரி சினிமா நட்சத்திரமாக புகழ்பெறவேண்டும். இதுவே என் ஆசை.
நானும், என் சகோதரி ராதாவும், ஒரே சமயத்தில் சினிமாவில் நடித்தபோதிலும் எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ கிடையாது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருந்தோம். ஒரு சமயம், சிவகுமார் சார் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "ராதா மிகச்சிறந்த நடிகை'' என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிவகுமார் கூறியதை ராதா விடம் சொல்லி பெருமைப்பட்டேன்.
சினிமாத்துறையில் அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். என் கலைப்பயணம் தொடர்ந்து நடைபெறும்.''
இவ்வாறு அம்பிகா கூறினார்.