சினிமா
ஒரே நாளில் அம்பிகாவின் 2 வெற்றிப் படங்கள்
தமிழ்ப் பட உலகின் எல்லாப் பிரபல நடிகர்களுடனும் அம்பிகா இணைந்து நடித்தார். ரஜினியுடன் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்'', "கமலஹாசனுடன் நடித்த "சகலகலா வல்லவன்'' ஆகியவை, ஒரே நாளில் (14-8-1982) வெளிவந்து சக்கை போடு போட்டன.
தமிழ்ப் பட உலகின் எல்லாப் பிரபல நடிகர்களுடனும் அம்பிகா இணைந்து நடித்தார். ரஜினியுடன் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்'', "கமலஹாசனுடன் நடித்த "சகலகலா வல்லவன்'' ஆகியவை, ஒரே நாளில் (14-8-1982) வெளிவந்து சக்கை போடு போட்டன. "அந்த 7 நாட்கள்'' படத்தைத் தொடர்ந்து, அம்பிகாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன.
அந்தக் காலக்கட்டத்தில், "ஆக்ஷன் ஹீரோ''வாகவும், ஸ்டைல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருந்த ரஜினிகாந்த், முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர வேடத்தில் "எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில் நடித்தார்.
முற்பகுதியில் கிராமத்து இளைஞனாகவும், பிற்பகுதியில் வயோதிக "கெட்டப்''பிலும் நடித்தார். அவருடைய மனைவியாக அம்பிகா நடித்தார். ரஜினியுடன் அம்பிகா நடித்த முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல; அம்பிகாவின் தங்கை ராதாவும், இந்தப் படத்தில் முதன் முதலாக அக்காவுடன் சேர்ந்து நடித்தார். புதுமையான கதை அமைப்பைக்கொண்டது "எங்கேயோ கேட்ட குரல்.'' அதிகம் படிக்காத - கிராமத்து இளைஞனை (ரஜினியை) மணக்கும் கதாநாயகி (அம்பிகா) கணவனை வெறுக்கிறாள்.
அந்த வெறுப்பினால், வேறொருவனுடன் ஓடிப்போக முடிவு செய்கிறாள். வீட்டை விட்டு வெளியேறிய பின் மனம் மாறுகிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து, கணவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள்.
அவளை கணவன் மன்னித்தபோதிலும், மீண்டும் ஒன்றாக வாழமுடியாது என்று கூறி, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அங்கே வசிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார். படத்தின் இறுதியில் கதாநாயகி இறந்து போவாள். அவள் உடலைத் தூக்க எவரும் வரமாட்டார்கள். அவள் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி ரஜினி இழுத்துச் செல்வார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதிய இப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு முற்றிலும் மாறுபட்ட படம்.
வயோதிக தோற்றத்தில் ரஜினியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா என்று முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால், படம் மனதைத் தொடும்படி அமைந்ததால், சகல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, நூறு நாட்கள் ஓடியது. இளம் நடிகையான அம்பிகா, கனமான வேடத்தை ஏற்று சிறப்பாகச் செய்திருந்தார். அம்பிகாவின் தங்கையாக ராதாவும் நன்கு நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-
"ரஜினி சாருடன் நான் நடித்த முதல் படம் "எங்கேயோ கேட்ட குரல்.'' அப்போது எனக்கு 20 வயதுதான் இருக்கும். வயதான `கெட்டப்'பில் நடித்தேன். "வயதான வேடத்தில் நடித்தால், தொடர்ந்து அந்த மாதிரியான வேடங்களையே தருவார்கள்'' என்று சிலர் பயமுறுத்தினார்கள்.
ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. படம் பெரிய வெற்றி பெற்று, எனக்குப் புகழ் தேடித்தந்தது. படத்தின் இறுதிக் காட்சியில், ரஜினி காலில் விழுந்து கதறும் காட்சியில் "கிளிசரின்'' போடாமல் நடித்தேன். நான் இறந்து கிடக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, என் தந்தை வந்திருந்தார். நான் பிணம் போல் கிடந்தேன்.
என் மீது வரட்டிகளை அடுக்கினார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த என் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது. "இனி இந்த மாதிரி காட்சிகளில் நடிக்காதே. கதை சொல்லும்போது, இந்த மாதிரி காட்சி ஏதாவது வருகிறதா என்று கேட்டுத்தெரிந்து கொள்'' என்றார். இப்போது கூட இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த சீன் வரும்போது என் தாயார் அழுதுவிடுவார்.''
இவ்வாறு கூறினார், அம்பிகா.
"எங்கேயோ கேட்ட குரல்'' திரைக்கு வந்த அதே நாளில் கமலஹாசனுடன் அம்பிகா இணைந்து நடித்த ஏவி.எம்.மின் "சகலகலா வல்லவன்'' படமும் ரிலீஸ் ஆயிற்று. "சகலகலா வல்லவன்'' படத்துக்கு முன்பே ஸ்ரீதரின் "நானும் ஒரு தொழிலாளி'' என்ற படத்தில் நடிக்க கமலஹாசனும், அம்பிகாவும் ஒப்பந்தம் ஆனார்கள். ஆனால், அந்தப்படம் முடிவடைந்து வெளிவருவதற்கு, மிகவும் காலதாமதம் ஆயிற்று.
கமல்-அம்பிகா நடித்து முதலில் வெளிவந்த படம் "சகலகலா வல்லவன்''தான். இதில் முற்பகுதியில் கட்டுக் குடுமியுடன் பட்டிக்காட்டு வாலிபனாக வரும் கமல், பிற்பகுதியில் நவநாகரீக இளைஞனாக வந்து அசத்துவார். பணக்காரப் பெண்ணான அம்பிகா அவரை காதலிப்பார். ஆட்டம் - பாட்டம் நிறைந்த, "சகலகலா வல்லவன்'' வசூலில் சக்கை போடு போட்டது.
கமலஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா குறிப்பிடுகையில், "நான் சிறுமியாக இருந்தபோது ஒரு படப்பிடிப்பில் கமல் சாரை சந்தித்தேன். `நீ அழகாக இருக்கிறாய். படத்தில் நடித்தால், எதிர்காலத்தில் பெரும் புகழ் பெறுவாய்' என்று கூறினார். படப்பிடிப்பில் நாங்கள் சந்தித்துக்கொண்டபோது, அதை நினைவூட்டிய கமல், நான் சொன்னபடி நடந்து விட்டது அல்லவா?' என்று கூறிச் சிரித்தார். உண்மையில் அவர் வாக்கு பலித்துவிட்டது'' என்றார்.
தொடர்ந்து "காக்கிச்சட்டை'', "உயர்ந்த உள்ளம்'', "விக்ரம்'', "காதல் பரிசு'', "கடல் மீன்கள்'' முதலிய படங்களில் கமலுடன் அம்பிகா நடித்தார்.