641ஹெச்பி பவர் கொண்ட ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
- ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடலில் 84 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் வழங்கப்படுகிறது.
- இந்த கார் 3.4 நொடிகளில் 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் சென்றுவிடுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷனை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐயோனிக் 5 N மாடல் அதன் ஸ்டான்டர்டு மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 2022 சர்வதேச கார் என்ற பெருமையை பெற்றது.
புதிய ஐயோனிக் 5 N மாடல், அதிக செயல்திறன் எதிர்பார்க்கும் பெட்ரோல் காரில் இருந்து எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிய வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐயோனிக் 5 N மாடல் 2023 குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் N பேட்ஜ் கொண்ட மாடல் இது ஆகும்.
ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது ஐயோனிக் 5 மாடல் 20 மில்லிமீட்டர் சிறியதாகவும், 50 மில்லிமீட்டர் அளவுக்கு அகலமாகவும், 80 மில்லிமீட்டர் அளவுக்கு நீளமாகவும் இருக்கிறது. இவை தவிர காரின் ஒட்டுமொத்த ஸ்டைலிங்கில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த காரின் பம்ப்பரில் ஏர் கர்டெயின், வென்ட் மற்றும் இன்டேக்குகள் உள்ளன.
ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடலில் 84 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பேட்டரியில் மேம்பட்ட தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு நிரந்தர மேக்னட் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒருங்கிணைந்து 600 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகின்றன.
இந்த காரில் உள்ள N க்ரின் பூஸ்ட் மோட் 641 ஹெச்பி வரையிலான திறன் கொண்டிருக்கிறது. மேலும் லான்ச் கன்ட்ரோல் மூலம் இந்த கார் 3.4 நொடிகளில் 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் சென்றுவிடுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 350 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது இந்த காரை 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.