ஆட்டோமொபைல்
இணையத்தில் லீக் ஆன கியா சொனெட் புதிய ஸ்பை படங்கள்
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கியா செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி போன்ற மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில், கியா சொனெட் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
புதிய கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
கியா சொனெட் புதிய ஸ்பை படங்களின் படி இந்த கார் இன்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர் கொண்டிருக்கிறது. காரின் பூட் லிட் முழுக்க லைட் பார் காணப்படுகிறது. இது இருபுறங்களில் உள்ள ஸ்ப்லிட் டெயில் லேம்ப்களை ஒன்றிணைக்கிறது. இத்துடன் காரை சுற்றி பாடி கிளாடிங், சிறிய குவாட்டர் விண்டோ கிளாஸ், ஸ்டீல் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
காரின் முன்புறம் டைகர் நோஸ் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் யுவிஒ கனெக்ட்டெட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.