ஆட்டோமொபைல்
புதிய கார் பெயருக்கு காப்புரிமை பெறும் ஸ்கோடா
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான பெயரை பயன்படுத்த இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் க்ளிக் எனும் பெயரை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறது. புதிய பெயர் எந்த மாடலுக்கு சூட்டப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா க்ளிக் பெயர் அந்நிறுவனத்தின் விஷன் ஐஎன் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஸ்கோடா விஷன் ஐஎன் மாடல் இந்தியாவுக்கென பிரத்யேகமான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனம் ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா விஷன் ஐ.என். 4256 எம்.எம். அளவில் நீளம், 2671 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட கிரில், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.