ஆட்டோமொபைல்
பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்

விரைவில் இந்தியா வரும் புதிய கார்கள்

Published On 2019-08-11 10:59 GMT   |   Update On 2019-08-11 10:59 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார்களின் பட்டியலை பார்ப்போம்.



இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்த கதியில் உள்ளது. சில நிறுவனங்கள் உற்பத்தியை ஒரு வாரம் வரை நிறுத்தி வைத்தன. இருந்தாலும் புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் அனைத்து நிறுவனங்களுமே ஆர்வம் காட்டுகின்றன. 

புதிய தயாரிப்புகள் மூலம் விற்பனையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று நிறுவனங்கள் உறுதியாக நம்புகின்றன. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஏராளமான புதிய மாடல் கார்கள் அறிமுகமாக உள்ளன. புதிய அறிமுகங்கள் நிறுவனங்களின் விற்பனையை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகின்றன என்பதற்கு காலம்தான் பதில் தர வேண்டும்.

பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்

சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றான பி.எம்.டபுள்யூ.வில் 7-வது தலைமுறை கார்கள் 3 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்கள் தயாரான அதே பிளாட்ஃபார்மில் 3 சீரிஸ் கார்கள் தயாராவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது அளவில் சற்று பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் 2 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 258 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்டது. 2 லிட்டர் டீசல் என்ஜின் 190 ஹெச்.பி. திறன் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடலுமே 8 ஆட்டோமேடிக் கியரைக் கொண்டுள்ளது. 



ஹூண்டாய் கிராண்ட் ஐ 10

கொரிய நிறுவனம் தனது பிரபலமான கிராண்ட் ஐ10 மாடலில் புதிய அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வடிவமைப்பிலேயே பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அகலமான முன்புற கிரில், அலாய் சக்கரங்கள், துல்லியமான ஒளி வீசும் முகப்பு விளக்குகள், புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் என புத்தம் புதிய தோற்றப் பொலிவுடன் தயாராகிறது. 

இதேபோல உள்புறத்தில் டேஷ் போர்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள் தாராள இட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. 8 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதி கொண்டது. பி.எஸ்6. புகை விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இது வருகிறது. 

இதில் 83 ஹெச்.பி. திறன், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. டீசல் மாடலைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் என்ஜினைக் கொண்டது.



கியா செல்டோஸ்

கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் விளம்பரம் மூலம் மக்களை பெருமளவில் சென்றடைந்துவிட்டாலும் அதிகாரபூர்வ அறிமுகம் ஆகஸ்ட் 22-ந் தேதிதான் நடைபெற இருக்கிறது. முதல் காரே எஸ்.யு.வி.யாக அறிமுகம் செய்துள்ளது கியா மோட்டார்ஸ். வடிவமைப்பில் ஏற்கனவே சந்தையில் உள்ள எஸ்.யு.வி. ரக மாடல்களைக் காட்டிலும் இது வித்தியாசமாக உள்ளது. 

வித்தியாசமான கிரில், துல்லியமான வடிவமைப்பு கொண்ட முகப்பு விளக்குகள், கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் பம்பர் வடிவமைப்பு இவை அனைத்தும் செல்டோஸ் மாடலின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது. மிகப் பெரிய அளவிலான தொடுதிரை, 360 டிகிரி சுழலும் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், காரினுள் வைபை வசதி, தேவையான விளக்கு வெளிச்சம் ஆகியன பிரம்மிப்பூட்டுகின்றன. 

இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடலிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் கொண்டிருக்கின்றன. இதில் ஸ்போர்டியர் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் தயாராகி வருகிறது. டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது.



ரெனால்ட் டிரைபர்

பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம் 4 மீட்டருக்குள்ளான 7 பேர் பயணிக்கும் வகையிலான எஸ்.யு.வி. மாடலை டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான ரெனால்ட் க்விட் மாடலின் மேம்பட்ட ரகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் இருக்கை வசதி பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 சிலிண்டர் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதில் 5 கியர்கள் மேனுவல் டிரான்ஸ் மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் மாடலுடன் வந்துள்ளது. ஜூன் 19-ம் தேதியே இந்தக் காரை அறிமுகம் செய்ய ரெனால்ட் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இது ஆகஸ்டு பிற்பாதியில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News