ஆட்டோமொபைல்
மஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய XUV700 மாடலின் சில முக்கிய அம்சங்கள் ஸ்பை படங்கள் வாயிலாக ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து மஹிந்திராவும் XUV700 அம்சங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. சமீபத்திய டீசரில் புதிய XUV700 பெரிய பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்தது. இத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள், ஓட்டுனர் உறக்கத்தில் இருப்பதை கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டூயல் ஹெச்.டி. ரெசல்யூஷன் ஸ்கிரீன்- ஒன்று தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், சோனி மியூசிக் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2021 மஹிந்திரா XUV700 மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.