ஆட்டோமொபைல்
இந்தியாவில் மாசிராட்டி MC20 முன்பதிவு துவக்கம்
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய MC20 மாடல் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாசிராட்டி நிறுவனத்தின் MC20 இந்திய முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த காரின் முதல் யூனிட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் ஜிப்லி, லிவான்டி மற்றும் குவாட்ரோபோர்ட் போன்ற மாடல்களை மாசிராட்டி விற்பனை செய்ய இருக்கிறது.
சர்வதேச சந்தையில் மாசிராட்டி MC20 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 3 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 621 பிஹெச்பி பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மாசிராட்டி MC20 மாடல் - வெட், ஜிடி, ஸ்போர்ட், கோர்சா மற்றும் ESC என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள டயல் மூலம் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சூப்பர்கார் பற்றிய இதர விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.