ஆட்டோமொபைல்
கியா கார்னிவல்

ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்

Published On 2020-01-23 08:37 GMT   |   Update On 2020-01-23 08:37 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் காரை வாங்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.



கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் காருக்கான முன்பதிவுகளை ஜனவரி 21-ம் தேதி துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 1410 பேர் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கியா கார்னிவல் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு, அதன் பின் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கிறது. 



கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.

புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News