ஆட்டோமொபைல்
எம்.ஜி. இசட்.எஸ்.

இந்திய சந்தையில் அதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்

Published On 2020-01-20 09:21 GMT   |   Update On 2020-01-20 09:21 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் எம்.ஜி. இசட்.எஸ். மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த காரின் விலையும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும், எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதன் முன்பதிவுகள் டிசம்பர் 21, 2019 இல் துவங்கப்பட்டது.

இந்நிலையில், முன்பதிவு துவங்கிய ஒரு மாதத்திற்குள் எம்.ஜி. இசட்.எஸ். காரை வாங்க சுமார் 2300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டு அறிமுகமான ஹெக்டார் மாடல் மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இரண்டாவது மாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.



இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டு நிகழ்விலேயே புதிய காரை வாங்கும் முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக விலை அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் எம்.ஜி. இசட்.எஸ். காருக்கான இரண்டாம் கட்ட முன்பதிவில் விலை மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.

எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News