பைக்

80கிமீ ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - இந்தியாவில் காப்புரிமை பெற்ற ஹோண்டா!

Published On 2023-05-31 05:25 GMT   |   Update On 2023-05-31 05:25 GMT
  • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
  • மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புதிய ஸ்கூட்டர்கள் டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என்று அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வினியோக துறை சார்ந்த பணிகளுக்கானவை ஆகும்.

புதிய டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பிரத்யேக தோற்றம் கொண்டிருக்கின்றன. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சமாகவே 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.

மிக குறைந்த வேகத்தில் செல்லும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றுக்கு சாலை வரியும் செலுத்த வேண்டாம். ஹோண்டா டேக்ஸ் e: மாடலில் ஹை-சீட் ஹேண்டில்பார், வட்ட வடிவம் கொண்ட ஒற்றை ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூபுலர் ஸ்பைன், ஒற்றை சீட் மற்றும் பேட்டரி பேக் உள்ளது.

ஹோண்டா ஜூமர் e: மாடலில் சற்றே தடிமனாக காட்சியளிக்கும் வெளிப்புற ஃபிரேம், வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சைடு ரியர் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.

இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனினும், ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 வாக்கில் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News