பைக்

இந்தியாவில் அறிமுகமான ஹீரோ Xoom 110

Update: 2023-01-30 10:46 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xoom 110 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • புதிய ஹீரோ Xoom 110 ஸ்கூட்டரின் முன்பதிவு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடலின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் LX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹீரோ Xoom 110 விலை விவரங்கள்:

ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999

ஹீரோ Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799

ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 68 ஆயிரத்து 625 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பிற்கு இந்த ஸ்கூட்டரில் இண்டகிரேட் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், ஹீரோ லிங்கோ கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் கார்னர் பெண்ட் லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர், போன் பேட்டரி ஸ்டேட்டஸ், கால்/எஸ்எம்எஸ் அலெர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ Xoom 110 அண்டர்சீட் ஸ்டோரேஜில் எல்இடி லைட், ஓபன் குளோவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஃபியூவல் ஃபில்லர் கேப் வழங்கப்படவில்லை. மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. 

Tags:    

Similar News