பைக்

உற்பத்தியில் புது மைல்கல் எட்டி அசத்திய ஏத்தர் எனர்ஜி

Published On 2023-02-02 08:15 GMT   |   Update On 2023-02-02 08:15 GMT
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக உள்ளது.
  • இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, தனது உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு லட்சமாவது யூனிட்டாக ஜென் 3 450X மாடல் ட்ரூ ரெட் நிற வேரியண்ட் அமைந்தது. உற்பத்தி மைல்கல் மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் மாத விற்பனையில் அசத்தி இருக்கிறது.

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வில் ஜென் 3 ரக ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்தது. மேலும் ஜனவரி மாதத்தில் ஏத்தர் எனர்ஜி இந்திய சந்தையில் விற்பனை செய்த மொத்த வாகனங்கள் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி வருடாந்திர அடிப்படையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனை 330 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2 ஆயிரத்து 825 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 12 ஆயிரத்து 149 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 9 ஆயிரத்து 324 யூனிட்கள் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏத்தர் வாகனங்கள் விற்பனை 32.24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் 2022 வாக்கில் ஏத்தர் எனர்ஜி உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது.

ஏத்தர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்த நிதியாண்டின் இறுதியில் இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஓசூரில் புதிதாக திறக்கப்பட இருக்கும் உற்பத்தி ஆலை மூலம் ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும்.

Tags:    

Similar News