அடுத்த மாதம் வெளியாகும் 2025 அட்வென்ச்சர் - தேதியை அறிவித்த யெஸ்டி
- 29 hp பவரையும் 29 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 334 cc ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சினைப் பெறுகிறது.
- 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் 2025 ஆம் ஆண்டு யெஸ்டி அட்வென்ச்சர் மாடலை வருகிற ஜூன் 4-ந்தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மாடல் கடந்த 15-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் மோதலைக் கருத்தில் கொண்டு, வெளியீட்டு நிகழ்வை யெஸ்டி நிறுவனம் ஒத்திவைத்தது.
2025 யெஸ்டி அட்வென்ச்சரைப் பற்றிச் சொல்லும்போது, இந்த மாடல் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது ஆகஸ்ட் 2024 இல் பிராண்ட் பைக்கில் மாற்றங்களைச் செய்ததிலிருந்து முதல் புதுப்பிப்பாகும். இந்த மாடலில் புதிய LED ஹெட்லைட் போன்ற சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். வடிவமைப்பை பொறுத்தவரை, இது ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்க ஒரு சமச்சீரற்ற அமைப்பாக இருக்கலாம். இதனுடன் சேர்த்து, அதன் முந்தைய மாடல்களில் இருந்து வேறுபடுத்தும் சில அழகியல் மாற்றங்களும் இருக்கலாம்.
தற்போதைய அம்சப்பட்டியலில் ஒருங்கிணைந்த USB சார்ஜர், புளூடூத் திறன், கைடட் நேவிகேஷன் மற்றும் ABSக்கான மூன்று மோட்கள்: ரோட், ரெயின் மற்றும் ஆஃப்-ரோடு. ஆஃப்-ரோடு மோடில், பின்புற சக்கரத்தில் உள்ள ABS-ஐ முழுவதுமாக அணைக்க முடியும்.
மெக்கானிக்கல் அம்சங்களை பொறுத்தவரை, 2025 யெஸ்டி அட்வென்ச்சர் தற்போதைய மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதே எஞ்சின் மற்றும் சேசிஸைக் கொண்டிருக்கும். இது 29 hp பவரையும் 29 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 334 cc ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சினைப் பெறுகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது, யெஸ்டி அட்வென்ச்சர் ரூ.2.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வருகிறது. புதிய மாடலில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுவதால், இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.