தடுத்து நிறுத்தியது குத்தமா? போலீஸ் முன் வாகனத்திற்கு தீ வைத்து எரித்த நபர்!
- போக்குவரத்து விதிமீறல் மற்றும் போலீஸ் நடவடிக்கை காரணமாக உலகெங்கிலும் பல முறை விசித்திர சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
- அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸ் நிறுத்திய சம்பவம் விசித்திர செயல்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
சாலை பயணங்களின் போது விசித்திர சம்பவங்கள் அரங்கேறுவது சாதாரண நிகழ்வாக மாறி விட்டன. அந்த வகையில், ஐதராபாத் நகரில் அரங்கேறிய சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. ஐதராபாத் சாலையில் தவறான வழியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத்-இல் உள்ள அமீர்பெட் பகுதியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை விதிமீறி இயக்கி இருக்கிறார். இவ்வாறு சென்று கொண்டிருந்ததை போலீஸ் அதிகாரி ஒருவர் பார்த்தார். உடனே தவறான வழியில் வந்த நபரை இருசக்கர வாகனத்துடன் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த எஸ் அசோக் என்ற நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த எஸ் அசோக் திடீரென எரிபொருள் கொண்டு வந்து தனது மோட்டார்சைக்கிள் மீது ஊற்றி அதற்கு தீ வைத்து எரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஐதராபாத் நகரில் போக்குவரத்து போலீசார் சட்டவிரோத பார்க்கிங் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சுமார் 472 பேரிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 65 ஆயிரம் வரை அபராதம் வசூலித்துள்ளனர்.
"போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட எஸ் அசோக் தவறான வழியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இவரை போலீசார் பில்லர் நம்பர் 1053 அருகில் தடுத்து நிறுத்தினர்," என காவல் துறை இணை ஆய்வாளர் ஏவி ரங்கநாத் தெரிவித்து இருக்கிறார்.