ஆட்டோ டிப்ஸ்
யமஹா ஆர்15 வி4

சட்டென சீறிப்பாயும் - யமஹா ஆர்15 வி4 ரிவ்யூ

Published On 2022-01-07 09:42 GMT   |   Update On 2022-01-07 09:42 GMT
யமஹா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 4 மாடல் இந்திய சந்தையில் 155சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.


இந்திய சந்தையில் யமஹாவின் பிரபல 155சிசி மோட்டார்சைக்கிள் சீரிஸ் ஆர்15 மாடலின் வெர்ஷன் 4 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1.67 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய யமஹா ஆர்14 வி4 ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

யமஹாவின் ஆர்15 வி4 மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். புதிய யமஹா ஆர்15 வி4 மாடலில் உள்ள அம்சங்கள், இதன் பயன்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.



யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 அம்சங்கள்

பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு
திறன் - 10,000 ஆர்.பி.எம்.-இல் 18.4 பி.ஹெச்.பி. 
இழுவிசை - 7500 ஆர்.பி.எம்-இல் 14.2 நியூட்டன் மீட்டர்
டிரான்ஸ்மிஷன் - கான்ஸ்டண்ட் மெஷ், 6 ஸ்பீடு 
சேசிஸ் - டெல்டா பாக்ஸ்
டையர்கள் முன்புறம் / பின்புறம் - 100/80 17M/C 52P டியூப்லெஸ் / 140/70 R17M/C 66H ரேடியல் டியூப்லெஸ் 
வீல்பேஸ் - 1325 மில்லிமீட்டர்
கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மில்லிமீட்டர்
சீட் உயரம் - 725 மில்லிமீட்டர்
எடை - 142 கிலோ
பியூவல் டேன்க் கொள்ளளவு - 11 லிட்டர்

டிசைன்:

புதிய ஆர்15 ஒட்டுமொத்த தோற்றம் யமஹாவின் ஆர் சீரிஸ் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 2021 யமஹா ஆர்7 மாடலின் பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் மிக கூர்மையான தோற்றம், பை-ஃபன்ஷனல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் உள்ளது. இதில் உள்ள எல்.இ.டி. பொசிஷன் லைட்கள் கண்களை போன்றே காட்சியளிக்கின்றன. இவற்றின் நடுவே ஹெட்லைட் உள்ளது.



இந்த பைக் பக்கவாட்டு பகுதிகள் ஒட்டுமொத்த வடிவமைப்புடன் ஒன்றி இருக்கிறது. இத்துடன் டூயல் டோன் பெயிண்ட், மேட் மற்றும் கிளாஸ் எஃபெக்ட் உள்ளிட்டவை ஆர்15 வெர்ஷன் 4 மாடலுக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்குகிறது. இதன் பூயூவல் டேன்க் மீது உள்ள சிறு சிறு மாற்றங்கள் பைக்கை ஓட்டும் போது புதிய அனுபவத்தை வழங்குகிறது. புதிய மாடலிலும் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. 



யமஹா ஆர்15 வி4 டெயில் பகுதி ஆர்7 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஆர்15 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே, புளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் போன், எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். இத்துடன் யமஹாவின் வை கனெக்ட் ஆப் மோட்டார்சைக்கிள் பயன்பாடு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குகிறது.

செயல்திறன்:

யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் என்ஜின் செயல்திறனை குறைக்காமல் சீராக இயங்க வைக்கிறது. 



இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ளதை விட 0.2 பி.ஹெச்.பி. மற்றும் 0.1 நியூட்டன் மீட்டர் டார்க் குறைவு ஆகும். எனினும், இதன் அக்செல்லரேஷன் சற்று வேகமாகவே உள்ளது.

புதிய ஆர்15 வி4 மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 47 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகலாம்.

ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:

யமஹா ஆர்15 மாடலில் அட்ஜஸ்ட் செய்ய முடியாத யு.எஸ்.டி. போர்க் உள்ளது. புதிய ஆர்14 கட்டுப்படுத்த மிக சிறப்பாகவே உள்ளது. அதிவேகமாக செல்லும் போது பைக் அதிக இரைச்சலின்றி சீறிப்பாய்கிறது. இந்த மாடலில் ரி-இன்போர்ஸ் செய்யப்பட்ட சப்-ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர சேசிஸ்-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இதன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம் மற்றும் சஸ்பெஷன் இணைந்து செயல்படுகிறது. கார்னெரிங் செய்வது ஆர்15 மாடலில் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. வளைவுகளில் ஓட்டுவது கூர்மையாக இருக்கிறது. எனினும், இதில் சிறந்த கண்ட்ரோல் பெற பயிற்சி அவசியமாகிறது. நகர நெரிசல்களில் சிக்காமல் நுழைந்து செல்ல புதிய ஆர்15 வி4 சவுகரியமாக உள்ளது.



புதிய வெர்ஷன் 4 மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க உதவுகிறது. இதில் உள்ள பிரேக்கிங் சிஸ்டம் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் யமஹா ஆர்15 வி4 விலை உயர்த்தப்பட்டது. அதன்படி இதன் விலை ரூ. 1,72,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யமஹா ஆர்15 வி4 மாடல் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையின் 155சிசி பிரிவில் களமிறங்கி இருக்கும் மற்றொரு ஸ்டிரீட் ஸ்போர்ட் மாடல் ஆகும்.

Tags:    

Similar News