ஆட்டோமொபைல்
ஒரே நாளில் 20 ஆயிரம் முன்பதிவுகளை பெற்ற போர்டு எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்
போர்டு நிறுவனத்தின் புதிய எப் 150 லைட்னிங் பிக்கப் டிரக் முதல் நாள் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
போர்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் எப் 150 பிக்கப் டிரக் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.
இந்த தகவலை போர்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அமெரிக்க சந்தையில் எப் 150 லைட்னிங் மாடல் விலை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.