ஆட்டோமொபைல்
வாகன உற்பத்தி

மார்ச் மாதத்தில் பயணிகள் வாகன உற்பத்தி 38 சதவீதம் சரிவு

Published On 2020-04-16 11:45 GMT   |   Update On 2020-04-16 11:45 GMT
இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் பயணிகள் வாகன உற்பத்தி சுமார் 38 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.



நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு வெளியாகும் முன்பிருந்தே பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து வந்தன.

எனினும், ஊரடங்கு உத்தரவு வெளியானது முதல் ஒட்டுமொத்த துறையும் முற்றிலுமாக முடங்கியது. ஊரடங்கு காரணமாக நாட்டில் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி 33.61 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. மார்ச் 2020 மாதத்தில் 14,47, 345 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. 2019 மார்ச் மாதத்தில் மொத்தம் 21,80,203 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.



பயணிகள் வாகன உற்பத்தியை பொருத்தவரை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,07,196 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் 3,34,948 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் பயணிகள் வாகன உற்பத்தி38 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி 19.24 சதவீதமும், வணிக வாகனங்கள் உற்பத்தி 82.88 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி 28.81 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி 50.39 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. 

நாடு முழுக்க வாகன விற்பனையகங்கள் மூடியே கிடப்பதால், வாகனங்கள் விற்பனையும் சரிவை சந்தித்து இருக்கின்றன. மார்ச் 2020 மாதத்தில் ஒட்டுமொத்தமாக வாகனங்கள் விற்பனை 44.95 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
Tags:    

Similar News