ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக முடங்கிய ஆட்டோமொபைல் துறை

Published On 2020-03-23 11:54 GMT   |   Update On 2020-03-23 11:54 GMT
உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் ஆட்டோமொபைல் துறை முடங்கியுள்ளது.



கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவன பணிகளை நிறுத்த துவங்கி இருக்கின்றன. நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசுகி, மஹிந்திரா மற்றும் டொயோட்டா போன்றவை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன. 

இதேபோன்று இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளர்களான பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா 2 வீலர் மற்றும் டி.வி.எஸ். மோட்டார் உள்ளிட்டவையும் தங்களது பணிகளை தற்காகிலகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.

மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானா ஆலையின் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆலை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. இதே போன்று ரோடக்கில் உள்ள ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தை மூட தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.



மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பூனே, மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன. எனினும், உற்பத்தி பணிகள் எதுவரை நிறுத்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. 

ஃபோக்ஸ்வேகன் ஏ.ஜி. இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி பணிகளை மூன்று வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் ஆலையில் உற்பத்தி பணிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தப்படுவதாக தெரிவித்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளை சார்ந்து இயங்கும் வியாபார மையங்களில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News