ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி குறைப்பு

Published On 2020-03-08 06:15 GMT   |   Update On 2020-03-07 11:26 GMT
பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை குறைத்து இருக்கிறது.



பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை.

விற்பனை நிலவரம் திருப்தி இல்லாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் குறைத்து 1,40,933 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 1,48,959 வாகனங்களை உற்பத்தி செய்து இருந்தது.



இந்நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,47,110 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இது 1.1 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 1,48,682-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.6 சதவீதம் சரிவடைந்து 1,36,849-ஆக குறைந்துள்ளது.

இந்நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.1,587 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 4.1 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,524 கோடியாக இருந்தது.
Tags:    

Similar News