கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
null

2025 தை மாத ராசிபலன்

Published On 2025-01-15 16:30 IST   |   Update On 2025-01-24 15:31:00 IST

கன்னி

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கன்னி ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எனவே இந்த மாதம் இனிய மாதமாக அமையும். எடுத்த காரியங்கள் வெற்றியாக முடியும். கொடுத்த கடன்கள் வசூலா கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். குரு பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இதுவரை அதிக முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது எடுத்த முயற்சியில் முடிவாகும்.

மிதுன - செவ்வாய்

தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் அடைவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் விருப்பம்போல் நிகழும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டாகும்.

மகர - புதன்

உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பஞ்சம ஸ்தானத்திற்குச் செல்லும் புதனால், படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்வு நடைபெற வழிபிறக்கும். உங்களை உதாசீனப்படுத்தி விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் இப்பொழுது மீண்டும் வந்து சேர முயற்சிப்பார்கள். வாகனங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

கும்ப - புதன்

உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன், தை 23-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் கும்பத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். பொழுதெல்லாம் சம்பாதிக்கும் எண்ணம் மேலோங்கும். ஆற்றல்மிக்கவர்கள் அருகிருந்து ஒத்துழைப்பு தருவார்கள்.

குரு வக்ர நிவர்த்தி

ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு உன்னதமான நேரமாகும். பலம் பெற்ற குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும் நேரம் இது. வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றி முடிவெடுப்பீர்கள். பங்குச்சந்தையால் பலன் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களால் வளர்ச்சி கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடிவரும். வருமானம் உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 15, 16, 21, 22, 27, 28, பிப்ரவரி: 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News