எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கன்னி ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்ம ராசியில் கேது இருக்கிறார். எனவே எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
எல்லாவற்றிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறையும், புதிய முயற்சிகளில் போராட்டமும் ஏற்படலாம். கடுமையாக முயற்சித்தாலும் சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லும். 'எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலவில்லையே, திடீர் திடீரென மாற்றங்கள் வருகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் வலிமை இழப்பதால் தொழில் வளர்ச்சியில் இடையூறு ஏற்படும். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு பிரச்சினைகள் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். உடல்நிலையிலும் சிறு சிறு தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். உற்சாகம் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன் வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகவே அமையும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். ஆகாரக் கட்டுப்பாட்டின் மூலம் ஆரோக்கியம் சீராகும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ வாய்ப்புகள் உருவாகும். புதிய உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.
மீன- சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது, ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு தனாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் வக்ரம் பெறுவதால் தனவரவில் தடைகள் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பணப்பற்றாக்குறையின் காரணமாக விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை அமையும்.
கடக- செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, நல்ல காரியங்கள் பல நடைபெறும். குறிப்பாக இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். இல்லத்தில் ஒற்றுமை நிலவும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 18, 19, 22, 23, ஏப்ரல்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.