வரவு அறிந்து செலவு செய்யச் சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்ற சுக்ரனோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்.
எனவே மாதத்தின் முற்பாதியை விட பிற்பாதி மகிழ்ச்சியாக இருக்கும். தடைகளும், தாமதங்களும் தானாக விலகியோடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். ராகு - கேதுக்களின் பெயர்ச்சிக்கு பிறகு, உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் பாக்கிய ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கும் போது, நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். குடும்பத்துடன் உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனம் அடிக்கடி பழுது ஆவதால், அதைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்ப- ராகு, சிம்ம- கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊர் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம் பலன் தருவதாக அமையும். வெவ்வேறு இடத்தில் பணிபுரியும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு உருவாகும். அதே சமயம் விரய கேதுவின் ஆதிக்கம் இருப்பதால், வீண் விரயங்கள் அதிகரிக்கும். இக் காலத்தில் ராகு- கேதுக்களுக்குரிய பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ நீங்கள் முயற்சி எடுத்திருந்தால், அதற்கு பலன் கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அதன் பார்வை பலத்தால் குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொடரும் வெற்றிகளால் துணிவு கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. தலைமை பதவிகள் கூட தானாக வரலாம். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 14, 15, 18, 19, 20, 29, 30, மே: 4, 5, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.