கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆனி மாத ராசிபலன்

Published On 2025-06-20 15:04 IST   |   Update On 2025-06-20 15:05:00 IST

அமைதியுடன் அரிய பணிகளைச்செய்யும் கன்னி ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடும், குருவோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். அதேநேரம் விரய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் எதிர்பாராத விதம் வந்துசேரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு பணியில் இடமாற்றம் ஏற்படலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையும். பிறரை நம்பி செய்த முயற்சிகள் கைகூடாமல் போகலாம். பிரச்சினைகள் குறைய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

கடக - புதன்

ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் சூடு பிடிக்கும். கூட்டாளிகள் லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முயற்சிப்பர். பொருளாதார நிலை உச்சத்தை அடையும். பொன், பொருள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறும் நேரமிது. இதுவரை உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவர்.

ரிஷப - சுக்ரன்

ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியான சுக்ரன் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். நடக்கும் தொழிலை விரிவுசெய்யும் முயற்சிக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நேரமிது. உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும் கைகூடலாம்.

செவ்வாய் - சனி பார்வை

மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கிறது. இது அவ்வளவு நல்லதல்ல. கூடுதல் விரயங்கள் ஏற்பட்டு குதூகலத்தை குறைக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. பணம் வந்த மறுநிமிடமே செலவாகி விடும். வாங்கிய இடத்தில் பிரச்சினைகளும், பத்திர பதிவில் தடைகளும் ஏற்படும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு அனுகூலமான நேரமிது. மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. மாதக் கடைசியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்.

இம்மாதம் ஹயக்ரீவர் வழிபாடு நன்மையை தரும்.

Similar News