தெய்வ நம்பிக்கையில் சிறந்த தனுசு ராசியினரே... தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசியினருக்கு 2026ம் ஆண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
மே மாதம் வரை சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். விழிப்புடன் செயல்பட வேண்டிய வருடம். அர்த்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவின் தாக்கம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும். மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்
ஆண்டு முழுவதும் தனுசு ராசிக்கு 4ம் மிடமான சுகஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும். ஜூன் மாதத்தில் குரு பார்வை சனி பகவானுக்கு கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தம் இல்லாத குற்றத்தில் சிக்கியவர்கள் வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும். பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.
ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்
ஆண்டின் துவக்கத்தில் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவானும் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சுரிப்பார்கள். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும்.ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும்.முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. சிலருக்கு மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.
மூலம்
நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் வருடம். இதுவரை இருந்த பயம் அகலும்.வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும்.நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். பிரதோஷ வழிபாடு செய்யவும்.
பூராடம்
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் வருடம்.மே மாதம் வரை ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வையிருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும்.புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். பெண்கள்,அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும்.ஆஞ்சநேயரை வழிபடவும்.
உத்திராடம் 1
பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமண முயற்சி பலிதமாகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். பெரிய பொருள் உதவிகள் கிடைக்கும். சுவாமி ஐயப்பனை வழிபடவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை மாலை லட்சுமி குபேரர் வழிபாடு செய்வதால் செல்வ வளம் கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406