search icon
என் மலர்tooltip icon

  தனுசு - ஆண்டு பலன் - 2024

  தனுசு

  புத்தாண்டு ராசிபலன்கள்-2024

  ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  2024 ஆங்கிலப் புத்தாண்டில் வருட கிரகங்களில் முயற்சி ஸ்தான அதிபதி சனியின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. ஏப்ரல் 21ல் குருபகவான் 6ம்மிடம் சென்றாலும் பார்வை பலத்தால் பல நன்மைகள் வழங்குவார். சுக ஸ்தான ராகுவும் தொழில் ஸ்தான கேதுவும் தொழில் மேன்மையை வழங்கப் போகிறார்கள்.

  குருவின் சஞ்சாரபலன்கள்

  ஏப்ரல் 21, 2024 வரை ராசி மற்றும் நான்காம் அதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்ப்பதால் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறார்.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடிவிற்கு வரும்.

  ஏப்ரலில் 6ம் மிடத்திற்குச் செல்லும் குரு பகவான் 5ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 12ம்மிடமான விரய ஸ்தானத்தையும் 9ம் பார்வையால் தன ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். தன்னம்பிக்கை தைரியம் கூடும். தொழில், உத்தியோகத்தில் வெற்றிகள் குவியும். தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரும்.நல்ல வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமான தம்பதியினர் இடையே நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறி நன்மை தரும் ஆண்டாக 2024-ம் ஆண்டு அமையப்போகிறது.

  பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். விரயத்தை சுப செலவுகளான சொத்து, நகை வாங்கவும், குடும்பத்திற்கு சுப நிகழ்வு நடத்தவும் பயன்படுத்தினால் சிறப்பான வெற்றிகள் தேடி வரும் சனியின் சஞ்சார பலன்கள் தனுசு ராசிக்கு 2, 3ம் அதிபதியான சனி பகவான் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். 3ம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 12ம்மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

  பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். விருப்பமும் கனவுகளும் நிறைவேறும். குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும்.

  தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும்.சகோதர வழியில் நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து ஆதாயம் ஏற்படும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசாபுத்திக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படும். தகவல் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொலைந்த கை மறதியாக வைத்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கிடைக்கும்.

  சிலர் உயில் எழுதலாம் அல்லது குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும்.நீண்ட காலமாக தடைபட்ட அனைத்து மங்கல நிகழ்வுகளும் நடைபெறும்.பாக்கிய பலன்களும், புண்ணிய பலமும் கூடும். குல தெய்வ, குடும்ப தெய்வ, முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

  ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

  நவகிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார். முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.புதிய தொழில் முயற்சிகள் தேடி வரும்.வழக்குகள் ஒத்திப் போகும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப் போவார்கள்.செய்தொழில் விருத்தியாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு உத்தியோகத்திலிருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும்.

  தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும். சொத்துக்கள் சேரும்.மனக் கவலைகள் அகலும்.உங்களது ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள்.குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

  மூலம்

  அதிர்ஷ்டம் அரவணைக்கும் வருடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். தொழில் போட்டிகள் நீங்கி திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வீடு கட்டத் தேவையான கடன் அல்லது புதிய தொழில் கடன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும். ஊடகங்களில் பணி புரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.

  ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். கொடுக்கல், வாங்கலில் சிரத்தை தேவை. விரயத்தை சுபமாக்க முயற்சிப்பது நலம்.மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். அரசியல் பிரமுகர்களின் சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும் சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

  பூராடம்

  சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும் வருடம். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அமையும். வெளிநாட்டில் கல்வி, வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஏழரை சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர் களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும்.

  இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். ஆரோக்கியம் சீராகி வைத்தியச் செலவுகள் குறையும்.கரும்புச்சாறு அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

  உத்திராடம் 1

  பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும் வருடம்.வாழும் இடத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றலை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சித்திக்கும். உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழில் லாபம் வியாபாரிகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

  சொத்து சேர்க்கை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் புனித யாத்திரைகள் செல்ல முயற்சி செய்யலாம். பலகாலமாக தீர்க்க முடியாத பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கம் முடிவுக்கு வரும். மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.பழைய கடன்கள் அடைபடும். திருமண முயற்சிகள் சாதகமாகும்.பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடவும்.

  திருமணம்

  சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும்.

  பெண்கள்

  இயற்கையிலேயே அழகான உங்களை ராசிநாதனான குருவே பார்ப்பதால் மேலும் அழகு பெறுவீர்கள். உடல் தேஜஸ் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முழு தைரியத்தோடு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ , மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டமாக தாத்தா பாட்டி வீட்டுச் சொத்து பெரும் பணம் போன்றவை கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, புதையல், உயில் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.

  வியாபாரிகள்

  சிலர் முன்னோர்கள் செய்த தொழிலையே சீர்திருத்தி செய்யலாம். தொழில் ஸ்தான கேது என்பதால் மிகப் பெரிய முதலீட்டில் மிகக் குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து அதில் உள்ள தசாபுத்தி மற்றும் கோட்ச்சார கிரகங்களின் சாதக பாதகம் அறிந்து தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும். தசாபுத்தி சரியாக இல்லாத போது தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

  உத்தியோகஸ்தர்கள்

  உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறு அனுகூலமான பலன்கள் நடைபெறும். பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள்

  பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். கோட்சார குருபகவான் அடுத்த ராகு கேது பெயர்ச்சி வரை சாதகமாக இருப்பதால் இக்கட்டான சூழ்நிலையில் உறுதியான முடிவெடுக்க முடியும். கட்சிக்காக உழைத்த உழைப்பு விருட்சமாக வளர்ந்து பலன் தரும் காலமாகும்.உங்கள் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு நின்று பக்க பலமாக இருக்கும்.

  பரிகாரம்

  வெற்றிலையில் பாக்குடன் நாட்டு சர்க்கரை வைத்து வியாழக் கிழமை இஷ்ட,குல தெய்வம் , தட்சிணாமூர்த்தி , மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் ஜீவசமாதியை வழிப்பட்டால் கவலை ஊழ்வினை சாபம் நீங்கும்.

  தனுசு

  ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

  தன்னம்பிக்கையான தனுசு ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஏழரைச் சனி காலத்தில் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். வருட கிரகங்கள் அனைத்தும் ஒரளவு சாதகமாக இருப்பதால் கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

  குருவின் சஞ்சார பலன்கள்:

  ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை நான்காம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 5மிடம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும் செலவும் சமனாகும். சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பார்கள். தொழில் உத்தியோகத்தில் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும்.குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக இருப்பதால் பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

  வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஆறு மாதம் வேலை பார்பார்கள் , சிலர் வேலைபிடிக்கவில்லை என்று சொந்த தொழில் செய்வார்கள். மறுபடியும் தொழில் சரியில்லை என்று வேலைக்கு செல்வார்கள்.

  வாழ்க்கையில் பார்க்காத தொழில் கிடையாது,செய்யாத வேலை கிடையாது என்று ரீதியாக தொழில் மற்றும் வேலையில் மாறி மாறி இருப்பார்கள்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும்.நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.

  சனியின் சஞ்சார பலன்கள்:

  ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

  புகழ், அந்தஸ்து, கெளரவம் அதிகரிக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும்.

  நினைத்த காரியங்கள் அலைச்சலுடன் நிறைவேறும்.

  கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமத பலன் உண்டு விவசாயிகள் கிணறு தோண்ட ஏற்ற நேரம். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும்.நிலம் தொடர்பான முதலீட்டில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.

  திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும்.

  ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

  ராசிக்கு 5ம் இடத்தில் நிற்கும் ராகுவும் 11ம் இடத்தில் நிற்கும் கேதுவும் அக்டோபர் 30, 2023 அன்று ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திற்கும் இடம் பெயறுகிறார்கள். ராகு, கேதுக்களால் பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பால் குழந்தை உருவாகும்.தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

  பலர் புதியதாக பண்ணை மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபடுவர்கள். சிலருக்கு அசையும், அசையாச் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழுதடைந்த பழைய சொத்துக்கள் அல்லது தரிசு நிலங்களை விற்று விட்டு புதிய வீடு, மனை வாங்கலாம்.சிலர் குடியிருக்கும் வீட்டை வாஸ்துப்படி திருத்தி அமைக்கலாம். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். தாய் வழிச் சொத்தில் இருந்த வம்பு வழக்குகள் சாதகமாகும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தங்கம் வாங்குவார்கள்.

  திருமணம்: ஏழரைச் சனியின் ஆதிக்கத்தால் தடைபட்ட திருமணங்கள் இனி நல்ல முறையில் நடைபெறும். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் பெற்றோர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் குருவருளாலும், திருவருளாலும் திருமணம் நடைபெறும். சிலருக்கு நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்கள் மூலம் வரன் அமையும்.

  பெண்கள்: பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு.வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கணவருடன் நல்ல புரிதல் உண்டாகும்.குழந்தை பாக்கியம் கிட்டும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். நண்பிகளுடன் இணைந்து அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

  மாணவர்கள்: மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

  மூலம்: புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும். தம்பதிகளின் உறவில் அந்யோன்யம் நீடிக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் விவகாரத்தில் முடியும்.நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

  பரிகாரம்: அமாவாசை நாட்களில் பசுவை 27 முறை வலம் வந்து வணங்கி காய்கனிகளை தானம் தர வேண்டும்.

  பூராடம்: அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல நேரும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். தாய், தந்தையின் நல்லாசி கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

  பரிகாரம்: மேலும் வளம் பெற தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.

  உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.அடமான நகைகள் மீண்டு வரும்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.கருத்து வேறுபாட்டால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும். அரசிடமிருந்துவீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கௌரவம் கிடைக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

  பரிகாரம்: வளர்பிறை பஞ்சமி திதியில் சிவசக்தி வழிபாடு செய்து வர பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று சுப பலன்கள் நடைபெறும்.

  புத்தாண்டிற்கு தனுசு ராசியினர் சென்று வழிபட வேண்டிய திருத்தலம் தென்குடித்திட்டை. தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித்திட்டை. இங்கே உள்ள அற்புதமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார் ராஜகுரு. ஏழரைச் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடும் விருச்சிக ராசியினர் இங்கு சென்று வழிபட்டு வர புத்தாண்டு புதிய வாழ்வியல் மாற்றத்தை உருவாக்கும்.

  தனுசு

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  அறிவாற்றலும், திறமையும் நிறைந்த தனுசு ராசியினருக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கிய பலன்களும் உங்களை தேடி வர உள்ளது. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகத்தை வழங்குவதுடன் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த புத்தாண்டில் நிறைவு செய்து மகிழ்வீர்கள்.

  ராசி அதிபதி குருவின் சஞ்சாரம், தனாதிபதி சனியின் சஞ்சாரம் மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரவுள்ளது. புத்தாண்டிற்கான விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

  குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் ஏப்ரல் 13, 2022 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன் படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள்.

  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறு வதற்கான சாத்திய கூறுகள் தென்படும். ஆண்களுக்கு மனைவி வழிச் சீதனம் வீட்டையும், மனதையும் நிரப்பும். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நண்பர்களால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. உங்க ளின் சகோதர, சகோ திரிகளுக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

  ராசியதிபதி குரு 3--ல் இருப்பதால் உங் களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் அல்லது பூர்வீக சொத் தில் அவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க லாம். இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற் றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க் கையால் குடும்பத்தில் மகிழ்சியும் சந்தோ ஷமும் அதிகரிக்கும்.

  ஏப்ரல் 13-ல் குரு 4-ல் ஆட்சி பலம் பெற்றபிறகு புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் தகறும். வாடகை இடத்தில் குடியிருந்தவர்கள் சொந்த கட்டிடத்தில் குடியேறும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டு உறவினர்கள் மூலம் அனுகூலமான பதில் வந்து சேரும். தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தை கைகூடும். 4-ல் ஆட்சி பலம் பெறும் குருவிற்கு 2-ல் நிற்கும் சனியின் பார்வை கிடைப்பதால் அடமானத்தில் உள்ள சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும்.

  உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஒய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும்.

  குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பெரும் விரயம் ஏற்படாது என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார்.

  26.2.2022 முதல் 6.4.2022 வரை தனுசிற்கு 5,12-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 2ல் இரண்டாம் அதிபதி சனியுடன் இணைகிறார். 5-ம் அதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேருவதால் பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான தசா புக்தி சாதகமாக இருந்தால் பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு பங்குச் சந்தை பெரும் இழப்பைத் தரும்.

  செவ்வாய் தனுசிற்கு பூர்வ புண்ணியாதிபதி என்பதால் மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். தீடீர் லாபம் கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும். சில வயதான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் மரியாதை குறைவாக நடத்துவதாக கருதி முதியோர் இல்லம் சென்று விடுவார்கள்.

  ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12, 2022 வரை ராசிக்கு 6-ல் இருக்கும் ராகு மற்றும் 12-ல் உள்ள கேதுவால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பலருக்கு உண்டாகும். சுய ஜாதகத்தை சரிபார்த்து வெளிநாடு வாய்ப்பை முடிவு செய்வது உத்தமம். கோட்சார ராகு ஒன்பதாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்யம் மனநிறைவு தரும்.

  ஏப்ரல் 12-ல் ராகு 5ம் இடத்திற்கும் கேது 11-ம் இடத்திற்கும் மாறும் போது குழந்தைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆத்மஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9-ஆம் அதிபதிகளின் தசை நடந்து கொண்டிருந்தால் புகழ் கொடிகட்டிப் பறக்கும். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும்.

  5ல் ராகு இருப்பதால் பூர்வீகச் சொத்து இன்று வந்துவிடும், நாளை வந்துவிடுமென, இலவுகாத்த கிளியாக நாளைக் கடத்தவேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். தந்தையின் ஆரோக்கியக் கேட்டினால் பொருள்விரயம் மிகும். எனினும் ஆயுள்குற்றம் இல்லை. தந்தை- மகன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தந்தை- மகன் பிரிந்துவாழ நேரும். தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். குலத்தொழில் செய்துவந்தவர்கள் அதைவிட்டு வேறுதொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.

  திருமணம்: கோட்சார ராகு/கேது மற்றும் குருவால் திருமணம் தனுசு ராசிக்கு திருமணம் தடைபடவில்லை. 40 வயதைக் கடந்தும் திருமணத் தடை இருப்பவர்களுக்கு கூட ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும் என்பது ஜோதிட ரீதியான உண்மை. சுக்கிர தசை, சூரிய தசை நடப்பவர்களுக்கு சுய ஜாதகப்படி தோஷம் இருந்தாலும் 2022-க்குள் திருமணம் நடந்து விடும். சந்திர தசை நடக்கும் தனுசு ராசியினருக்கு அஷ்டமாதிபதி தோஷத்தால் திருமணத் தடை நீடிக்கும். கோட்சார குரு ஏப்ரல் 2022-ல் மீன ராசிக்கு பெயர்ந்தவுடன் 5-ம் பார்வையால் ராசிக்கு எட்டாம் இடமான கடகத்தைப் பார்ப்பதால் பலருக்கு திருமணத் தடை நீங்கும்.

  பெண்கள்: ஏழரைச் சனியின் தாக்கம் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பொறுமையையும் நிதானத்தையும் கடை பிடிப்பது முக்கியம். பொருளாதார பற்றாக்குறை அகலும்.வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடிக்க வேண்டும். கணவர் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  விவசாயிகள்: நான்காம் அதிபதி குரு 4-ல் ஆட்சி பலம் பெறும் போது ஏப்ரல் 2022--க்கு மேல் நல்ல மாற்றம் உண்டாகும். அன்றாடம் அழியக்கூடிய காய்கறிகள், பழங்கள், நெல் போன்ற உணவுப் பொருட்களை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

  உத்தியோகஸ்தர்கள்: தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.

  முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும்.

  அரசியல்வாதிகள்: அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக்கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.

  மாணவர்கள்: மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.

  மூலம்: குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதி ராகவே செயல்படுவார். உடல் உபாதைகள் அகலும். சனிக் கிழமை சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

  பூராடம்: தொழில் வளம் பெருகி செல்வச் செழிப்பு ஏற்படும். மிகுதியான சுபவிரயம் உண்டாகும். எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக குறுக்கு வழியை தேடக்கூடாது.வெள்ளிக்கிழமை காலை 6---7 சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட கடன் சுமை தீரும்.

  உத்திராடம் 1-ம் பாதம்: உங்களின் திட்டவட்டமான, தீர்க்கமான வழி நடத்தல் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். குடும்பத்தாரின் தேவையை குறிப்பறிந்து நிறைவேற்று வீர்கள். ஞாயிற்று கிழமை சிவன் கோவிலில் உலவாரப் பணிகள் செய்திட காரியசித்தி கிட்டும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×