எந்த செயலிலும் தனித்துவம் காட்டும் சிம்ம ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன லாபாதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு குருவும் இணைந்திருப்பதால் சென்ற மாதத்தை காட்டிலும் சிறப்பான மாதமாகவே அமைகிறது. எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் ஏற்படும். ஆயினும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் சனியை பார்ப்பதால் உடல்நலத்தில் மிகமிக கவனம் தேவை. கொடுக்கல் - வாங்கல்களில் பிறரை நம்பி செயல்பட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வரவை காட்டிலும் செலவு கூடும். வீண் விரயங்களும் வரலாம். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றங்கள், மன அமைதியை குறைக்கும். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. குடும்பச் சுமை கொஞ்சம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினை ஏற்படலாம். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக கூட்டாளிகளின் அனுசரிப்பு குறையும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். தொழில் ஸ்தானதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு அதற்கான முயற்சி கைகூடும். சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும் நேரமிது. குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களால் பெருமை சேரும். வளர்ச்சி பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது நிறைவேறும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் உள்ள சனியை சிம்மத்தில் உள்ள செவ்வாய் பார்க்கிறார். இந்த சனி, செவ்வாய் பார்வை காலத்தில் எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திருப்பங்களும், அதிகமான விரயங்களும் ஏற்படலாம். ஒருசில காரியங்களை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற நேரங்களில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள் சாதாரண பொறுப்புக்கு மாற்றப்படுவர். மனபயம் அதிகரிக்கும் நேரமிது. குடும்பத்தில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது அரிது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. கலைஞர்களுக்கு அதிக முயற்சி செய்தும் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறையை தீர்க்க ஒருதொகை செலவாகும்.
இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களை போக்கும்.