சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 பங்குனி மாத ராசிபலன்

Published On 2025-03-12 08:56 IST   |   Update On 2025-03-12 08:57:00 IST

இனிமையான பேச்சினால் எதையும் சாதிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருப்பதால் நிதானத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது. தன - லாபாதிபதி புதனுடன், உங்கள் ராசிநாதன் சூரியன் இணைந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். என்றாலும் மன அமைதி குறையும்.

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. கண்டகச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. மூட்டு வலி, முழங்கால் வலி என்று ஏதேனும் ஒரு தொல்லை வந்து கொண்டேயிருக்கும்.

மீன - புதன் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் சஞ்சரிக்கும் புதன், அங்கு நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் உள்ளார். இதன் விளைவாக வருமானப் பற்றாக்குறை ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யும் முயற்சி தாமதப்படும்.

பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் இடையூறு ஏற்படலாம். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையாலும் பிரச்சினைகள் வரும் என்பதால், எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நல்லது.

கும்ப - புதன் சஞ்சாரம்

மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன், உங்கள் ராசியைப் பார்க்கும் இந்நேரம் மிக அற்புதமான நேரமாகும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். பாசம்மிக்க நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவர். தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மீன - சுக்ரன் வக்ரம்

மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதோடு பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். 'கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அதுவும் கிடைக்கும். கடமையை சரிவரச் செய்து, அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

கடக - செவ்வாய்

உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம், செவ்வாய். பங்குனி 24-ந் தேதி கடக ராசியில் அவர் நீச்சம் பெறுகிறார். 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் ஏற்படும். பூமியால், பிள்ளைகளால் என்று அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து அலைமோதும். இதுபோன்ற நேரங்களில் பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளின் பாசம் குறையும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதை விரிவுசெய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 16, 17, 19, 20, 31, ஏப்ரல்: 1, 5, 6.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

Similar News