2025 கார்த்திகை மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
- ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.
சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியனை குரு பார்க்கின்றார். ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே இனம் புரியாத கவலையும், மனக்குழப்பமும் ஏற்படும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால், பெற்றோரின் உடல்நலனில் தொல்லை, பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத சிக்கல், வருமானப் பற்றாக்குறை ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டவர்களுக்கு, பிறரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகி்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களின் எதிர்ப்புகளால் முடிய வேண்டிய சுபகாரியங்கள் தாமதப்படும். அதேசமயம் அஷ்டமாதி பதியாகவும் குரு பகவான் விளங்குவதால், இதுவரை முடிவடையாதிருந்த வழக்குகள் இப்பொழுது முடிவடையும். வராது என்று நினைத்த கடன் பாக்கிகள் வசூலாகும். சுபச்செய்திகள் உண்டு.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்தநேரம், நல்ல நேரம்தான். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குரிய திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். வாங்கிய இடத்தை விற்பதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் சிறப்பாக அமையும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 20, 21, டிசம்பர்: 2, 3, 7, 8, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீ்ர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.