ஆன்மிக களஞ்சியம்
null

திருவாரூர் தியாகராஜர் ஆலய தனித்துவங்கள்

Published On 2023-08-30 18:21 IST   |   Update On 2023-08-30 18:31:00 IST
  • இங்குள்ள பைரவர் "சித்தி பைரவர்" எனப்படுகிறார்.
  • இங்குள்ள உற்சவ அம்மன் "மனோன்மணி"க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

திருவாரூர் தியாகராஜர் ஆலய தனித்துவங்கள்

சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்" எனக் கூறி முடிப்பார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோயில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு.

ஆனால், சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக்கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு" என்பார்கள்.

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோயிலின் சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்குள்ள உற்சவ அம்மன் "மனோன்மணி"க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் "ஆகாச பைரவர்" காவல் காத்து வருகிறார்.

இங்குள்ள பைரவர் "சித்தி பைரவர்" எனப்படுகிறார்.

அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது.

சிவன் சன்னதியின் பிரகாரத்தில் மிகப்பெரிய "சிவசூரியன்" அருள்பாலிக்கிறார்.

வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில்தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன.

இந்த துர்க்கைகளையும், மகாலட்சுமியையும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார்.

அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு.

அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பர்.

தியாகராஜர் கோயிலில், அம்பிகையான நீலோத்பலாம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

அம்மனுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறாள்.

அவள் தோளில் முருகன் இருக்கிறார். முருகனின் தலையை அம்மன் தடவிக் கொடுக்கும் விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி வீணை வைத்திருப்பது வழக்கம்.

ஆனால், திருவாரூர் சிவன் சன்னதி பிரகாரத்தில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம்.

இவள் சிவனை நோக்கித் தவமிருக்கிறாள்.

ஹயக்கிரீவரும் தனி சன்னதியில் லிங்க பூஜை செய்யும் காட்சியைக் காணலாம்.

இவரை "ஹயக்கிரீஸ்வரர்" என்கின்றனர்.

இந்த இருபெரும் கல்வி தெய்வங்களையும் மாணவர்கள் பூஜித்தால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

Tags:    

Similar News