ஆன்மிக களஞ்சியம்

பாவங்களை போக்கும் நாள்

Published On 2024-01-21 12:32 GMT   |   Update On 2024-01-21 12:32 GMT
  • மானிட அவதாரம் எடுத்து பூமிக்கு ராமன் வந்தபோது, சனி பகவான் அவரைக் காட்டுக்கு அனுப்பினார்.
  • மனிதன் தன் பாவத்தைக் களைந்து, சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க உதவும் நாளே புரட்டாசி சனி.

சனி பகவானால் துன்பப்படாத மனிதர்களே இல்லை கடவுள்களையே இவர் சோதிக்கிறார் என புராணங்கள் சொல்கின்றன.

கடவுளே, மனித அவதாரம் எடுத்து வந்தாலும் இவர் விடுவதில்லை.

மானிட அவதாரம் எடுத்து பூமிக்கு ராமன் வந்தபோது, சனி பகவான் அவரைக் காட்டுக்கு அனுப்பினார்.

மனைவியைப் பிரியச் செய்தார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சொற்களை பேசுவார்கள்.

பாண்டவர்கள் நாடு, மனைவியை இழந்தனர். அரிச்சந்திரன் வறுமையால் மனைவியை விற்றான். மனைவியைப் பிரிந்து காட்டில் திரிந்தான் நளன்.

ராஜாதி ராஜாக்களான இவர்களே இப்படி என்றால், சாதாரண மானிட ஜென்மங்களான நம்மை சனிபகவான் விட்டு வைப்பாரா என்ன? மனிதர்களில், இவர் பாவம் செய்யாதவர்களை மட்டும் விடுவார்.

மற்றவர்களை பாடாய்படுத்தி விடுவார். மனிதனாகப் பிறந்தவன் தன் பாவத்தைக் களைந்து, சனீஸ்வர பகவானின்  பிடியிலிருந்து தப்பிக்க உதவும் நாளே புரட்டாசி சனி.

அன்று பகலில் விரதமிருந்து மாலையில், விஷ்ணு கோவில் களுக்கு செல்ல வேண்டும். சில விஷ்ணு கோவில்களில், சனீஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களிலும் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு.

இந்த சன்னதிகளில் கருப்புத் துணியில் எள்ளை நல்லெண்ணைக்குள் மூழ்கடித்து தீபம் ஏற்ற வேண்டும்.

சில விஷ்ணு கோவில்களில் பெரிய குழி தோண்டி அதற்குள் எள்ளைப் போட்டு எண்ணை ஊற்றி ஆழி போல எரிப்பர்.

இதன் பொருள் என்ன தெரியுமா?

கருப்புத் துணி, மாய அலையில் சிக்கிய இந்த உலகம்.

இந்த இருண்ட உலகில் இன்பங்களைத் தேடி அலையும் ஆத்மாக்கள், அவற்றை அடைவதற்காக பாவம் புரிகின்றனர்.

அந்த பாவங்களே எள்.

உதிரியாக செய்த பாவங்களை மொத்தமாக கருப்புத் துணியில் கட்டி, ஆழியில் சேர்த்து எரித்து விடுகிறோம். மொத்தத்தில் பாவங்களை அடியோடு ஒழிப்பதற்குரிய நாள் புரட்டாசி சனி.

Tags:    

Similar News