ஆன்மிக களஞ்சியம்

பிரம்மனே முன் நின்று நடத்தும் பிரம்ம உற்சவம்

Published On 2023-12-29 12:44 GMT   |   Update On 2023-12-29 12:44 GMT
  • புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.
  • கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.

இந்த நன்னாளுக்கு முன்பாக ஒன்பது தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற மிகப்பெரிய திருவிழா பிரம்மோற்சவம்.

வெங்கடாசலபதிக்கு முதன்முதலில் பிரம்மாதான் உற்சவம் கொண்டாடினார் என்பதால் திருமலையின் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளன்று துவஜஸ்தம்பம் என்னும் கொடி மரத்தில் கருட பகவானின் திருவுருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.

ஒன்பதாம் நாளன்று உற்சவம் முடிந்தது என்பதை உலத்திற்கு அறிவிக்கும் விதமாகக் கொடி இறக்கப்படும்.

கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தியான மலையப்பர் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மாட வீதியில் உலாவருவார்.

பிரம்மாவே முன்நின்று நடத்தும் உற்சவம் என்பதால் மலையப்பர் வாகனத்திற்கு முன்னால் ஒரு சிறு தேர் வலம் வரும்.

அதில் பிரம்மதேவன் அமர்ந்து அருள்புரிவதாக ஐதீகம்.

மலையப்பரின் திருவீதிவலம், குடை, சாமரம், மங்களவாத்தியம், மேளதாளம் முழங்க, தீப்பந்தங்கள் ஆகியவை புடை சூழ வருவதே ஒரு தனி அழகு.

வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியபடி செல்வார்கள்.

இன்னொரு குழுவினர் தமிழப் பாசுரங்களை ஓதியபடி சுவாமியுடன் ஊர்வலம் போவார்கள்.

இவ்வளவு கோலாகலங்களுடன் நடக்கும் திருவீதி வலத்தையும், மலையப்பரையும் தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.

இந்த ஒன்பது நாட்களும் கோவிலில் ஹோமத்தீ வளர்த்து யாகம் நடைபெறும்.

மாலை வேளைகளில் மலையப்பருக்கு மிகச்சிறப்பாக ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படும்.

Tags:    

Similar News