ஆன்மிக களஞ்சியம்

அம்மை நோய் இறங்கும்

Published On 2023-07-23 15:42 IST   |   Update On 2023-07-23 15:42:00 IST
  • தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.
  • நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

மயிலை முண்டகக்கண்ணியம்மனின் அருள் சிறப்புகளாக எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். அதில் தனிச்சிறப்பாக அம்மை பாதிப்பை உடனே இறங்கச் செய்வதை சொல்கிறார்கள்.

ஒருவருக்கு அம்மை போட்டிருந்தால், அதுக்கு அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் ஆலயம் வந்து பூசாரிகளிடம் தகவல் சொன்னால் போதும். அவர்கள் அம்மனின் தீர்த்தம், மஞ்சள்,வேப்பிலையை கொடுப்பார்கள்.

அவற்றை வாங்கிச்சென்று அம்மையால் பாதிக்கப்பட்டவரிடம் கொடுக்க வேண்டும். தீர்த்தத்தை உடனே உட்கொள்ளச் செய்ய வேண்டும். அவர் தலையில் சிறிது தீர்த்தம் தெளிக்கலாம்.

அம்மை போட்டுள்ள இடங்களில் அம்மனின் பிரசாதமான மஞ்சளை தேய்த்து விடலாம். உடலில் சிலருக்கு அம்மை பாதிப்பு அதிகமாகி எரிச்சல் ஏற்படலாம். அந்த இடங்களில் வேப்பிலையால் தடவிக் கொடுக்கலாம்.

இது தவிர அம்மை போடப்பட்டவர்...... இடத்தில் தலை மாட்டில் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வைக்கலாம். இதனால் அம்மன் அருள் பெற்று அம்மை உடனே இறங்கி விடும் என்கிறார்கள்.

இது பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் நடந்த உண்மையாகும். அன்னையின் தீர்த்தம் அருந்தி, அவள் ஆலயத்து மஞ்சளை `அம்மா...' என்றழைத்து நெற்றியில் பூசிக்கொண்டவர்களுக்குத்தான் அந்த மகத்துவம் தெரியும்.

பில்லி-சூனியம் ஓடி விடும்

சிலருக்கு அல்லது சில குடும்பங்களுக்கு பில்லி-சூனியத்தால் பாதிப்பு ஏற்படலாம். அந்த சூனிய பாதிப்பு பற்றி அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள்.

தொழிலில் நஷ்டம், வீண் மனக்கவலை, குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை, கணவன்-மனைவி இடையே தகராறு, பொருள் நஷ்டம் என்று இந்த பில்லி சூனியத்தின் பாதிப்பு வடிவம் வேறு, வேறு வகைகளில் இருக்கலாம்.

இத்தகைய பிரச்சினைகள் தொடர்கதையாக இருந்தால் அதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டாமா? அந்த பொறுப்பை நீங்கள் முண்டகக்கண்ணியம்மனிடம் ஒப்படைக்கலாம்.

அன்னைக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள். பிறகு `அம்மா உன்னிடம் பொறுப்புகளை போட்டு விட்டேன்' என்று மனம் உருகி வேண்டி வீடு திரும்புங்கள். இந்த எளிய பிரார்த்தனையே போதும், உங்களைப்பிடித்த பில்லி-சூனியம் போன்றவை வந்த சுவடு தெரியாமல் ஓடோடி விடும்.

இவள்தான் தாய்

மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம்,ராயப்பேட்டை பகுதிகளில் எத்தனையோ அம்மன் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.

அதனால் தான் மற்ற அம்மன் ஆலயங்களில் உற்சவங்கள் மற்றம் விழாக்கள் நடக்கும் போது முதலில் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபடுவார்கள். இங்கிருந்து தான் அந்த ஆலயங்களுக்கு கரகம் எடுத்து செல்வார்கள்.

இந்த வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்

இத்தலத்தின் இடது பக்கத்தில் இரண்டு அரச மரத்துக்கு அடியில் ஏராளமான நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் பேரில் இந்த சிலைகளை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்த நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய்விளக்கு தீபம் ஏற்றி கையில் வைத்து தீபாரதனை காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News