- உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
- உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.
உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே உறியடி திருவிழாவை நடத்துகிறார்கள். திருவண்ணாமலையில் அடி அண்ணாமலையில் இந்த தடவை 3-வது ஆண்டாக உறியடி விழா நடக்கிறது. மற்றபடி தமிழக கிராமங்களில் கோவில் விழாக்களில் உறியடி நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு.
உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.
உறியடி விழாவில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களிடம் ஆளுக்கு ஒரு கம்பை கொடுத்து விடுவார்கள். அந்த கம்பை பயன்படுத்தி அவர்கள் உறியில் கட்டி தொங்க விடப்பட்ட பானையை உடைக்க வேண்டும்.
ஆனால், எளிதாக பானையை உடைத்து விட முடியாது. ஒவ்வொருவராக ஓடி வந்து பானையை உடைக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பானையை அடிக்க கம்பை ஓங்கும்போது பானையை மேல் நோக்கி, கீழே நோக்கி என்று ஒருவர் கயிற்றால் இழுத்துக் கொண்டு இருப்பார். இதனால் குறி தவறி, பானையை எளிதில் உடைக்க முடியாமல் போய்விடும். அதையும் தாண்டி பானையை உடைப்பவருக்கு பரிசு வழங்கப்படும்.
சில இடங்களில் குறிப்பிட்ட உயரத்தில் பானையை கட்டி வைத்திருப்பார்கள். அதை இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, ஒருவர் மீது ஒருவர் ஏறிச்சென்று உடைப்பார்கள். பானையை உடைத்த இளைஞர் குழுவுக்கு பரிசு வழங்கப்படும்.
இதேபோல், உறியடி பானையை உடைக்க வருபவரின் கண்களை துணியால் கட்டி, அவரது கையில் ஒகு கம்பையும் கொடுத்து, பானையை உடைக்கச் சொல்வதும் உண்டு.
இப்படி உறியடி விழா பல வகைகளாக நடக்கும்.
இந்த விழா அழகான தத்துவம் ஒன்றை நமக்கு எடுத்துரைக்கின்றது. பானை என்பது பரம்பொருள், அது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. பரம்பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் இறைவனை அடைய முடியாமல் போய் விடுகின்றன. ஆனால், இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, அகங்காரம் என்னும் பானையை உடைத்து விட்டால், இறையருள் எனும் பரிசு நமக்கு கிடைத்து விடும்.