search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் அமைந்த தலம்
    X

    தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் அமைந்த தலம்

    • எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பசுமையை இந்த ஆறு உருவாக்கி இருக்கிறது.
    • இதனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ரம்மியமான மனநிலை உண்டாகிறது.

    தென்பெண்ணை ஆறு தென் இந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.

    இந்த ஆறு கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறக்கிறது.

    அங்கிருந்து 430 கி.மீ. தூரத்தில் பாய்ந்து இறுதியில் தமிழ்நாட்டில் கடலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

    தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ. நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மு. நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ. நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ. நீளத்திற்கும் பாய்கிறது.

    இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ. ஆகும்.

    மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

    ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள் ஆகும்.

    காவேரிப்பட்டினம், மஞ்சமேடு, இருமத்தூர், ஈச்சம்பாடி, அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம், அனுமந்தீர்த்தம், பள்ளிட்டு, மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், பேரங்கியூர், தளவானூர், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், சொர்ணாவூர் மற்றும் கடலூர் ஆகிய நகரங்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன.

    இந்த ஆற்றின் கரையோரத்தில் எத்தனையோ தெய்வீக திருத்தலங்கள் அமைந்து இருந்தாலும் ஆதிதிருவரங்கம் ஆலயம் அமைந்து இருந்து மிக மிக சிறப்பானதாக காணப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தழுவியபடியே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.

    ஆலயத்துக்கு வருபவர்கள் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தம் ஆடிவிட்டு வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆதி திருவரங்கம் ஆலயத்தில் தென்பெண்ணை ஆற்றை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது.

    ஆதிதிருவரங்கம் ஆலயத்தை சிறப்பிப்பது போல வளைந்து நெளிந்து செல்கிறது.

    எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பசுமையை இந்த ஆறு உருவாக்கி இருக்கிறது.

    இதனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ரம்மியமான மனநிலை உண்டாகிறது.

    மிக மிக அரியதாகவே இத்தகைய மனநிலையை உணர முடியும்.

    அதை உருவாக்கி தரும் ஆலயங்களில் ஒன்றாக ஆதிதிருவரங்கம் ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×