search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- விழிக்கு துணை!
    X

    ஆன்மிக அமுதம்- விழிக்கு துணை!

    • உயிர் நீப்பதற்கு முன்பாகத் தன் மனைவி கோசலையிடம் சிரவணனின் பெற்றோர் தனக்கிட்ட சாபத்தைச் சொல்லி புலம்பினார் என்கிறது ராமாயணம்.
    • உடல் ஊனத்தைக் கேலி செய்ததன் தண்டனையாகவே பாஞ்சாலி பின்னர் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறாள் என்கிறது ஓர் அபூர்வமான மகாபாரதக் கதை.

    அட்சம் என்றால் வடமொழியில் கண் என்று பொருள். மீனாட்சி என்றால் மீன்போன்ற கண்ணை உடையவள் எனப் பொருள். மீனாட்சி என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல் கயல்கண்ணி என்பது.

    கறுப்பு வெள்ளை ஆகிய இரு வண்ணங்களைக் கொண்டிருத்தல், வடிவத்தால் ஒன்றுபடல், நீரில் தோய்ந்திருத்தல் போன்ற பல தன்மைகள் கண்ணுக்கும் மீனுக்கும் பொதுவானவை. இதனாலேயே கண்களுக்கு மீன் உவமையாகச் சொல்லப்படுகிறது.

    பார்வதி தேவி பாரத தேசத்தின் மூன்று முக்கியத் திருத்தலங்களில் அருள்பாலிக்கிறாள். மதுரையில் அவள் மீனாட்சியாகவும் காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் காட்சி தருகிறாள்.

    இந்த மூன்று திருத்தலங்களிலும் அவள் பெயர் அவளது அழகிய விழியை மையமாக்கியே அமைந்துள்ளது. மீன் போன்ற கண்களை உடையவள் மீனாட்சி என்றால் கருணை பொழியும் கண்களை உடையவள் காமாட்சி. விசாலமான கண்களை உடையவள் விசாலாட்சி.

    `நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு - கங்கை நீராட்சி செய்துவரும் வடகாசிப் பதிதனில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு - உயர் கோனாட்சிப் பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதனில் காமாட்சி என்ற பெயர் எனக்கு - கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடிக் காட்சிதந்தேன் உனக்கு!'

    என்ற கண்ணதாசன் பாடல், தேவியே பாடுவதாக அமைந்துள்ள திரைப்பாடல்.

    * இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் கண்ணில்லாத கணவன்-மனைவி பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது.

    பார்வையற்ற ஏழைத் தம்பதியான சாந்தாவன், ஞானவதி இருவருக்கும் பிறந்த மகன் சிரவண குமாரன். பெற்றோருக்குப் பணிவிடை செய்வதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன்.

    பெற்றோர்களைக் காவடியில் சுமந்து கொண்டு அவர்கள் விரும்பியபடி தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் அவர்களை அமர வைத்தான். அதிகாலையில் தம் பெற்றோரின் தாகம் தீர்க்க நதியிலிருந்து குடத்தில் நீர்கொண்டு வர நதிக்கரைக்குப் போனான்.

    அவன் குடத்தில் நீர் கொள்ளும் ஒலியைத் தொலைவிலிருந்து கேட்டார் வேட்டைக்கு வந்த மாமன்னர் தசரதர். இருள் பிரியாத நேரத்தில் ஒலியை மட்டுமே கேட்ட அவர், காட்டு விலங்கான யானை நீர் அருந்துவதாகத் தவறாக எண்ணினார். ஒலி வந்த திசை நோக்கி சப்தவேதி என்ற அம்பை எய்தார்.

    சிரவண குமாரன் அந்த அம்பு தாக்கிக் கீழே விழுந்தான். அவனது மரண ஓலம் கேட்டு ஓடோடி வந்த தசரதர், தான் செய்த செயலுக்கு மன்னிப்பு வேண்டிக் கதறினார்.

    இறக்கும் தறுவாயிலும் தன் பெற்றோரின் தாகம் தீர்க்கும் எண்ணமே அவன் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. குடத்து நீரைப் பெற்றோரிடம் கொண்டுசேர்க்க வேண்டிக் கொண்டு அவன் உயிர் நீத்தான்.

    குடத்து நீரோடு பெற்றோரைத் தேடிச் சென்றார் தசரதர். தற்செயலாக நடந்த விபரீதத்தைச் சொல்லி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.

    கடும் சீற்றம் கொண்ட சிரவணனின் பெற்றோர் தங்கள் மகன் இல்லாத உலகில் வாழ விரும்பவில்லை என்று தீ மூட்டச் சொல்லி அதில் பாய்ந்து உயிர் நீத்தனர். உயிர் நீக்கும் தறுவாயில் `நாங்கள் மகனைப் பிரிந்து அனுபவிப்பதைப் போன்ற புத்திர சோகத்தை நீயும் அனுபவிப்பாய்` எனச் சபித்தனர்.

    அந்தச் சாபம் அப்போது ஒருவகையில் தசரதருக்கு வரமாயிற்று. புத்திரன் இல்லாத அவருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள்.

    ஆனால் அந்தச் சாபம் இறுதியில் பலிக்கவே செய்தது. தன் நான்கு புதல்வர்களும் அருகில் இல்லாத நேரத்தில், ராமனைக் கானகத்திற்கு அனுப்பியதால் ஏற்பட்ட தாளாத துக்கத்தில் தசரதர் உயிர் நீத்தார்.

    உயிர் நீப்பதற்கு முன்பாகத் தன் மனைவி கோசலையிடம் சிரவணனின் பெற்றோர் தனக்கிட்ட சாபத்தைச் சொல்லி புலம்பினார் என்கிறது ராமாயணம்.

    ராமாயணத்தில் அகலிகை கதை வருகிறது. கவுதமரின் மனைவி அகலிகை மேல் தகாத இச்சை கொண்டான் தேவர்களின் அரசன் இந்திரன். அதையறிந்த கவுதமர் அவன் உடல் முழுவதும் பெண்ணுறுப்புகள் தோன்றக் கடவது எனச் சபித்தார்.

    இந்திரன் தன் தவறுக்கு வருந்தி அழுதும் தொழுதும் சாப விமோசனம் வேண்டினான். அவன் உடலில் தோன்றிய பெண் உறுப்புகள் பிறர் பார்வையில் விழிகளாகவே தென்படும் என அவர் சாப விமோசனம் அருளினார்.

    இந்திரன் தன் உடலெங்கும் கண்களை உடையவனாக அதன் பின்னர் காட்சி தரலானான் என்கிறது இந்திரனைப் பற்றிய புராணக் கதை.

    * பார்வையற்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை மகாபாரதம் சித்தரிக்கிறது. கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரர் பிறவியிலேயே பார்வையற்றவர்.

    அவர் மனைவியான காந்தாரி தன் கணவர் அடையாத பார்வையின்பத்தைத் தானும் அடைய மறுத்துத் தன் விழிகளை வாழ்நாள் முழுதும் துணியால் கட்டிக் கொண்டிருந்தாள் என்கிறது மகாபாரதம்.

    பாண்டவர்கள் கட்டிய மாளிகைக்கு அவர்கள் அழைப்பின் பேரில் விஜயம் செய்கிறான் துரியோதனன். அந்த மாளிகையின் தரை பளிங்குத் தரையாக மின்னுகிறது. அதில் நீர் எது நிலம் எது என்று தெரியாமல் துரியோதனன் தடுமாறுகிறான்.

    அவன் தடுமாற்றத்தை உப்பரிகையிலிருந்து பார்க்கும் பாஞ்சாலி கலகலவென்று நகைக்கிறாள். நகைப்பதோடு நிற்கவில்லை. `உன் தந்தைதான் பார்வையற்றவர் என்றால் நீயுமா?` என வேறு கேட்டுவிடுகிறாள்.

    அந்தச் சொல்லின் விளைவாக துரியோதனன் மனத்தில் வஞ்சினம் உருவாகிறது. அதனால் மூண்டதே பாரதப் போர். உடல் ஊனத்தைக் கேலி செய்ததன் தண்டனையாகவே பாஞ்சாலி பின்னர் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறாள் என்கிறது ஓர் அபூர்வமான மகாபாரதக் கதை.

    பார்வையற்ற திருதராஷ்டிரன் மகாபாரதப் போர் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினான்.

    ஞானக் கண் பெற்றிருந்த சஞ்சயன் திருதராஷ்டிரனின் அரண்மனையில் இருந்தவாறே ஞானக் கண்ணால் போர்க்கள நிகழ்வுகளைக் கண்டு திருதராஷ்டிரனிடம் உள்ளது உள்ளபடி விவரித்தான் என்றும் சொல்கிறது மகாபாரதம்.

    பாரத தேசத்தில், அன்னை பார்வதி தேவி குடிகொண்ட முக்கியமான ஆலயங்கள் சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன.

    தந்தை தட்சனால் அவன் நடத்தும் யாகத்தில் பார்வதி தேவியாகிய தாட்சாயணி அவமதிக்கப்பட்டாள். அவள் தட்சன் தந்த உடல் வேண்டாமென அதைத் துறந்து அழிந்துபோனாள்.

    தன் மனைவி தாட்சாயணியின் உடலைச் சுமந்துகொண்டு கடும் சீற்றத்தோடு ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான்.

    சிவன் தொடர்ந்து ஆடினால் உலகம் அனைத்தும் அழிந்து போகுமே? சிவனின் ஆட்டத்தை நிறுத்த, திருமால் தன் சக்கராயுதத்தால் தாட்சாயணியின் உடலை வெட்டி வீழ்த்தினார்.

    அந்த உடல் பகுதிகள் பாரத தேசத்தில் ஐம்பத்தியோரு இடங்களில் விழுந்தன. அந்த ஐம்பத்தியோரு இடங்களே ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாயின. கோலாப்பூர் மகாலட்சுமி சக்தி பீடம், பார்வதி தேவியின் விழிகள் விழுந்த இடம் எனக் கூறப்படுகிறது.

    * `பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒருவிழியால் என்னை நீ பார்த்தாலும் போதும் வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்!' எனக் கவிஞர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் எழுதிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல் ஒன்று உண்டு. முருகனுக்கு ஆறுமுகங்கள் என்பதால் பன்னிரண்டு கண்கள்.

    முருகப்பெருமானுக்குப் பதினெட்டுக் கண்கள் என்று கூறும் மரபும் உண்டு. சிவனது நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பில் தோன்றியவன் அல்லவா முருகன்?

    எனவே தந்தையைப் போலவே முருகனுக்கும் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உண்டு என்றும் அதனால் மொத்தம் அவனுக்குள்ள கண்கள் பதினெட்டு என்றும் சொல்வதுண்டு.

    * அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் பக்தர்களின் விழிக்குத் துணையாயிருப்பது முருகப் பெருமானின் திருவடிகள்தான் என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.

    `விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகாஎனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.'

    நமது விழிகளுக்குத் துணையாவது முருகனின் மெல்லிய மலர்ப்பாதங்கள். உண்மை மாறாத சொல்லுக்குத் துணை முருகனின் திருநாமங்கள்.

    முன்பு செய்த பழியைத் தரும் பாவங்களை அகற்றத் துணையாவது முருகனது பன்னிரண்டு தோள்கள். அச்சமுடைய இந்த வாழ்க்கை என்னும் நெடுவழியில் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தனின் வேலும் மயிலுமே என்கிறார் அருணகிரி நாதர்.

    * ஆயிரம் கண்ணுடையாள் என மாரியம்மனைக் குறிப்பிடுவதுண்டு. மாரியம்மன் தன் ஆயிரம் கண்களால் உலகில் நடைபெறும் அத்தனையையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

    மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் டி. குண்ணத்தூர் அருகில் அன்னை ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் நாற்பத்தியோரு அடி உயரமான அன்னையின் திருவுருவச் சிலை அமைந்துள்ளதை தரிசிக்கலாம்.

    ஆண்டவனைத் தரிசிக்க ஆலயங்களுக்குச் செல்கிறோம். நமது விழிகளால் தான் கடவுளைத் தரிசிக்கிறோம். புறக்கண்ணால் கண்ட கடவுளை அகக்கண்ணாலும் காண வேண்டித்தான் பின்னர் தியானம் செய்கிறோம்.

    எங்கும் பரவியுள்ள இறைச்சக்தி தன் சூட்சுமமான விழிகளால் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

    அந்த விழிகளாலேயே நம்மேல் அருளைப் பொழியவும் அந்த இறைச்சக்தி காத்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் நம் வாழ்வில் எந்நாளும் இன்பமே அன்றித் துன்பமில்லை.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×