search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோமாதா வழிபாடு
    X

    கோமாதா வழிபாடு

    • மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு.
    • புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன.

    வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும்,

    பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது.

    பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

    பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல் கோமாதா, பசுத்தாய் எனப் போற்றுவது நம் வழக்கம்.

    பெற்ற தாய்க்கு ஈடாக போற்றப்படுவது கோமாதா என்றழைக்கப்படும் பசுதான்.

    இன்னும் சொல்லப் போனால் குழந்தைக்கு அமுது அளிப்பதில் பசு தாயைவிட மேலானதே.

    தாயில்லாத குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பதிலாக பசுவின் பாலை உண்டு வளர்வதை இன்றைய நாளில் நாம் பல இடங்களில் காண்கிறோம்.

    ஆன்மிக நோக்கில் மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு

    புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன.

    பசுவின் பெருமையை உணர்ந்தே ஆன்றோர்கள் பிரார்த்தனை செய்யும் போது "கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம்" என்று பிரார்த்தனை செய்வார்கள்.

    அதாவது, பசுவுக்கும் அந்தணர்களுக்கும் எப்போதும் நன்மை உண்டாகட்டும் என்பது இதன் பொருள்.

    "நீங்கள் புண்ணியமானவர்கள், நீங்கள் நல்ல வண்ணம் வாழுங்கள். காலையும் மாலையும் பால் தரும் நீங்கள் கன்றுகளுடனும் காளைகளுடனும் இன்னும் பொலிவீராக இங்கேயுள்ள நீர்நிலைகள் உமக்கு வற்றாத ஊற்றாகுக. நீவிர் இங்கு மகிழ்ச்சியாய் வாழ்வீராக வளம் பெருக்குவீராக" என்று சாம வேதம் பசுவினை போற்றுகின்றது.

    பசு தான் வளரும் வீட்டிற்கு மகிழ்ச்சி அளிப்பனவாகக் காணப்படுகிறது.

    பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும்.

    சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம்,

    பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன

    வீட்டிற்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியைத் தரும்.

    கல்யாணம் என்ற சொல் மங்களத்தைக் குறிக்கும். அத்தகைய மங்களத்தைக் குறிக்கும் கல்யாணி என்பது பசுவிற்கு உரியதாகும்.

    "கோ" என்ற சொல்லுக்கு இறைவன் என்றும், அரசன் என்றும், தலைவன் என்றும் எண்ணற்ற பொருள் உண்டு.

    அவற்றுள் ஒன்று பசு. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்றும் பொருள் உண்டு.

    செல்வம் என்பது பொருட்செல்வத்தை மட்டுமின்றி அருட்செல்வத்தையும் சேர்த்துதான் சொல்கிறோம்.

    பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர்.

    இது தவிர பசுக்கள் கூடுகின்ற இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர்.

    அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள்.

    கூடவே பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும் போது,

    பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும் ஆங்காங்கே நட்டு வைத்தனர்.

    ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.

    Next Story
    ×