search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கட்டவாக்கம் நரசிம்மர்
    X

    கட்டவாக்கம் நரசிம்மர்

    • நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன.
    • அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.

    கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் வழிபாடு சகல நன்மைகளையும் வழங்க வல்லது என்பது சமயச் சான்றோர்களின் கருத்து. அதுவும் யோக கோலத்தில் உள்ள நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது பன்மடங்கு சிறப்பு வாய்ந்தது.

    யோக கோலத்துடன் அதுவும் லட்சுமியுடன் சுமார் 16 அடி உயரத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கட்டவாக்கம் என்னுமிடத்தில் ஆலயம் கொண்டுள்ளார். தாம்பரம் - வாலாஜாபாத் சாலையில் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது இவ்வாலயம். ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி அபய வரத ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன. அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.

    மடியில் வீற்றிருக்கும் தாயார், தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சவுந்தர்யமான கோலத்தில் அருள்கிறார்.

    மேலும் நரசிம்மருக்கு 12 பற்கள் அமைந்துள்ளன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் - ஆக நவகிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கியிருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும, வஜ்ரதம்ஷ்ட்ரம் வராஹ அவதாரத்தையும், வில் - அம்பு பரசுராம, ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ணாவதாரத்தையும் நினைவுபடுத்துகின்றன.

    மேலும் ஜய - விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் செய்ய பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் யாவற்றையும் இந்த நரசிம்மரே தாங்கியிருப்பது விசேஷம்.

    Next Story
    ×