search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    25 அடி உயர கிருஷ்ணர்
    X

    25 அடி உயர கிருஷ்ணர்

    • பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.
    • கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளைக் நிகழ்த்திவிட்டு, பாண்டவ தூதப் பெருமாள் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார். அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன். அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும் என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார். இந்த கிருஷ்ணரின் பெயர் தூதஹரி எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது. இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொரு வரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    Next Story
    ×