search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கை கொடுத்த விநாயகர்...
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கை கொடுத்த விநாயகர்...

    • தம்பி லிகிதுடு தன் அண்ணனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் மாம்பழ தோட்டத்துக்குள் புகுந்தான்.
    • தவறு செய்த லிகிதுடுவின் இரண்டு கைகளையும் வெட்ட உத்தரவிட்டார். அதன்படி லிகிதுடுவின் 2 கைகளும் வெட்டப்பட்டன.

    காணிப்பாக்கம் விநாயகர் அருள் வெளிபடுத்தப்பட்ட சம்பவங்கள் பல தடவை நடந்துள்ளன. வரலாற்று குறிப்பில் இடம்பெற்றுள்ள ஒரு அற்புதம் வருமாறு:-

    காணிப்பாக்கம் கிராமத்தின் அருகில் பகுதா நதி என்றொரு நதி உள்ளது. அந்த காலத்தில் பாலம் கட்டப்பட்ட வசதி இல்லாததால் மக்கள் அந்த பகுதா நதியில் இறங்கி நனைந்தபடிதான் கரை கடந்து வருவார்கள்.

    பெரும்பாலானவர்கள் அந்த பகுதா நதியை கடக்கும் போதே, புனித நீராடி விட்டு வந்து சுயம்பு விநாயகரை வழிபட்டு செல்வார்கள். இந்த பழக்கத்தால் காணிப்பாக்கம் விநாயகர் புகழ் பரவியது.

    காணிப்பாக்கத்தில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணன்-தம்பி வசித்து வந்தனர். அண்ணன் பெயர் சுங்குரு. தம்பி லிகித்துடு.

    ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் காணிப்பாக்கம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டனர்.

    காலையில் நடக்க தொடங்கி மதியம் வரை அவர்கள் நடந்து கொண்டே இருந்தனர். நீண்ட தூரம் நடந்ததால் அவர்களுக்கு 'களைப்பு' ஏற்பட்டது.

    அதோடு பசியும் வயிற்றை கிள்ளியது. பசி அதிகரித்த காரணத்தால் அவர்களால் மேற்கொண்டு தொடர்ந்து நடந்து செல்ல முடியவில்லை.

    கால்கள் தள்ளாட்டம் போட்டன. பசி மயக்கத்தில் கண்கள் சொருகியது.

    அப்போது பாதையோரம் மிகப்பெரிய மாஞ்சோலை இருப்பதை அண்ணன்-தம்பி இருவரும் பார்த்தனர். மாமரங்களில் நிறைய மாம்பழங்கள் நன்றாக பழுத்து தொங்கிக் கொண்டிருந்தது.

    அதைப்பார்த்ததும் தம்பி லிகித்துடுக்கு பசி மேலும் அதிகரிப்பது போல இருந்தது. இரண்டு மாம்பழத்தை பறித்து சாப்பிட்டால் பசி அடங்கி விடும் என்று நினைத்தான்.

    அந்த மாஞ்சோலை அந்த நாட்டு அரசனுக்கு சொந்தமானதாகும். அதில் நுழைந்து யாரும் மாம்பழம் பறிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

    என்றாலும் லிகிதுடுக்கு பசியை அடக்க வேறு வழி தெரியவில்லை. ராஜாவின் மாஞ்சோலைக்குள் புகுந்து மாம்பழம் பறித்து சாப்பிட முடிவு செய்தான்.

    இதற்கு அண்ணன் சங்குடு எதிர்ப்பு தெரிவித்தான். வேண்டாம் இந்த பழங்கள் எல்லாம் அரசருக்கு சொந்தமானவை. அவற்றை பறிப்பது ராஜ துரோகமாகும் என்று எச்சரித்தான்.

    ஆனால் பசி வந்தால் பத்தும் பறந்து போகுமே.

    தம்பி லிகிதுடு தன் அண்ணனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் மாம்பழ தோட்டத்துக்குள் புகுந்தான். மாம்பழங்களைப் பறித்து ஆசை தீர தின்றான். அதன் பிறகே அவனது பசி அடங்கியது. நிம்மதியாக வெளியில் வந்தான்.

    அங்கு அண்ணன் சங்குடு கடும் கோபத்தில் நின்று கொண்டிருந்தான். நீ செய்தது பெரிய தவறு. என் தம்பியாக இருந்தாலும் நீ குற்றவாளி. உன்னை அரசனிடம் ஒப்படைப்பதே என் கடமை என்று தம்பியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான்.

    அரசர் நடந்ததை எல்லாம் கேட்டார். தவறு செய்த லிகிதுடுவின் இரண்டு கைகளையும் வெட்ட உத்தரவிட்டார். அதன்படி லிகிதுடுவின் 2 கைகளும் வெட்டப்பட்டன.

    இதை கண்டு அண்ணன் சங்குடு பதறிப் போனான். அரசர் சாதாரண தண்டனை கொடுப்பார் என்று நினைத்த அவனுக்கு தன் தம்பி கைகள் வெட்டப்பட்டது மிகவும் கவலையளித்தது.

    சுயம்பு விநாயகா உன்னை நேரில் வழிபடத்தானே வந்தோம். வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே என்று மனம் வருந்தினான். விநாயகரிடமே முறையிடலாம் என்று தம்பியுடன் கோவில் நோக்கி நடந்தான்.

    அப்போது பகுதா நதி குறுக்கிட்டது. அதில் புனித நீராட அண்ணன்-தம்பி இருவரும் மூழ்கி எழுந்தனர். என்ன ஆச்சரியம்?

    ஆற்றில் விநாயகரை நினைத்தப்படி குளித்த தம்பி லிகிதுடுவின் கைகள் முன்பு போல தோன்றி இருந்தன. அவன் கைகள் வெட்டப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை.

    மகிழ்ச்சி அடைந்த இருவரும் காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்துக்கு வந்து மனதார வழிபாடு செய்தனர். கைகளை திருப்பி கொடுத்ததற்காக விநாயகருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு பகுதா நதி காணிப்பாக்கம் விநாயகரின் புனித நீராடல் பகுதியாகி விட்டது. இது போன்று ஏராளமான அற்புதங்களை காணிப்பாக்கம் விநாயகர் பலரது வாழ்வில் நடத்தி உள்ளார்.

    Next Story
    ×