search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காணிப்பாக்கம் விநாயகர்- 30
    X

    காணிப்பாக்கம் விநாயகர்- 30

    • காணிப்பாக்கம் கோவிலுக்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள்.
    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்கிறது.

    1. காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோவில் சென்னையில் இருந்து சுமார் 165 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    2. காணிப்பாக்கம் விநாயகரின் அற்புத ஆற்றல்களையும், சிறப்புகளையும் தெரிந்து கொள்ள ஒரு பிரகார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் முக்கிய ஊர்களுக்கு சென்று சுயம்பு விநாயகர் பற்றி தகவல்களை பரப்பி விடுகிறது.

    3. காணிப்பாக்கம் கோவிலை மேம்படுத்த ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. இதை கருத்தில் கொண்டு சுமார் 75 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    4. காணிப்பாக்கம் விநாயகர் முன்பு சத்தியம் செய்வது பற்றிய தகவலை படித்து இருப்பீர்கள். சிலர் நான் மது அருந்தமாட்டேன் என்று கூட விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டு செல்வதுண்டு.

    5. சுயம்பு விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டால் செய்ததுதான். ஏனெனில் ஆந்திர மாநில மக்கள் இந்த விநாயகரை தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள். அவர் முன்பு செய்யப்படும் சத்தியத்துக்கு பிறகு வேறு அப்பீலே கிடையாது.

    6. விநாயகர் கோவில் அருகில் ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் என்ற சிவாலயம் உள்ளது. ராஜகுலோத்துங்க சோழன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கட்டிய 108 சிவாலயங்களில் இந்த மணிகண்டேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இந்த சிவாலயம் நிறைய கலை சிற்ப வேலைபாடுகள் நிறைந்த சிவாலயமாகும்.

    7. காணிப்பாக்கத்தில் ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட சிறிது நாளில் அதன் அருகில் ஸ்ரீவரதராஜ சாமி கோவிலும் கட்டப்பட்டது. எனவே இத்தலத்தை ஹரிஹர ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள்.

    8. காணிப்பாக்கம் கோவில் மேம்பாட்டுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் உதவிகள் செய்து வருகிறது. முதல் கட்டமாக 14 அறைகள் கொண்ட ஒரு விடுதியை கட்டிக்கொடுத்துள்ளது.

    9. திருப்பதி ஏழுமலையான் தலத்தில் நடப்பது போன்றே காணிப்பாக்கத்திலும் விநாயகர் முன்னிலையில் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு முகூர்த்த நாளில் ஒரே சமயத்தில் சுமார் 300 திருமணங்கள் நடைபெற்றன.

    10. திருப்பதி கோவிலில் விற்கப்படுவது போல இங்கும் லட்டு விற்பனை செய்கிறார்கள். 50 ரூபாய்க்கு ஒரே ஒரு லட்டு, பெரிய லட்டாக தருகிறார்கள்.

    11. திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு முன்பு நெறிப்படுத்தி தனி, தனி காம்ப்ளக்ஸ் அறைகளில் அமர வைப்பது போல இங்கும் காம்பளக்ஸ் அறைகள் கட்ட திட்டம்.

    12. காணிப்பாக்கம் கோவிலை பிரமாண்டமாக காட்டுவதே பிரகார சுற்றுச்சுவர் கட்டமைப்புதான்.

    13. காணிப்பாக்கம் கோவிலில் காளிகோபுரம் ஒன்று கட்ட உள்ளனர். நெல்லூரைச் சேர்ந்த ஆதி நாராயண ரெட்டி என்பவர் இத்திட்டத்துக்கு ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

    14. காணிப்பாக்கம் கோவிலுக்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்கிறது.

    15. காணிப்பாக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அந்த பகுதி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

    16. காணிப்பாக்கம் கோவில் மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்று வருவதால், எதிர்காலத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு ரூ.1 கோடி செலவில் கோவிலை சுற்றியுள்ள சுமார் 41 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

    17. புதிதாக வாங்கப்பட்ட இடத்தில் அன்னதான கூடம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இரண்டு கல்யாண மண்டபங்கள், 4 வி.ஜ.பி. தங்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    18. சுயம்பு விநாயகர் கோவிலின் ராஜகோபுரத்தை ரூ.80 லட்சம் செலவில் மேம்படுத்த திட்டம்.

    19. காணிப்பாக்கம் விநாயகருக்கு தினமும் கொழுக்கட்டை படையல் போட்டு பூஜை நடத்தப்படுகிறது.

    20. காணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. பவுர்ணமி நாளில் இத்தலத்தில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த திரள்வது குறிப்பிடத்தக்கது.

    21. சுயம்பு விநாயகரை இஸ்லாமிய பெருமக்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    22. விநாயகரிடம் பிரார்த்தனை செய்து வேண்டி கொண்டவர்கள், அந்த பிரார்த்தனை நிறைவேறியதும் கோவில் பிரகாரத்தில் கொழுக்கட்டைகளை எடுத்து வந்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கிறார்கள். சில சமயம் விநாயகருக்கு வைத்து வணங்கப்பட்டதும் சுட, சுட கொழுக்கட்டையை தானமாக கொடுக்கிறார்கள்.

    23. பிரகாரத்தில் கண்ணாடி மண்டபம் பின்புறம் நாகாத்தம்மன் சிலை உள்ளது. திருமணத்துக்கு வேண்டிக் கொள்ளும் பெண்கள் அந்த நாகத்தம்மன் சிலை மீது மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி செல்கிறார்கள். அப்படி செய்தால் உடனே திருமணம் கை கூடி விடுமாம்.

    24. காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வதை காண முடிகிறது.

    25. இத்தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இங்கு தோஷம் கழிப்பது உள்ளிட்ட எந்த பரிகார பூஜைகளும் நடத்தப்படுவது இல்லை.

    26. சுயம்பு விநாயகரை வழிபட செல்லும் போது இரண்டே இரண்டு அருகம்புல் வாங்கிப் போட்டாலே போதும் என்கிறார்கள்.

    27. விநாயகருக்கு பொதுவாக 21 வகை நைவேத்தியம் படைப்பதுண்டு. ஆனால் சுயம்பு விநாயகருக்கு மிகவும் பிடித்தது வெண் பொங்கலும், தயிர் சாதமும்தான்.

    28. காணிப்பாக்கம் வரும் பக்தர்களுக்கு தினமும் கோவில் நிர்வாகம் சார்பில் 25 கிலோ புளியோதரை தயார் செய்து வினியோகம் செய்யப்படுகிறது.

    29. இத்தலத்துக்கு என்றே பிரத்யோகமாக ரூ.6 கோடி செலவில் தங்க விமான கோபுரம், ரூ.4 கோடியில் தங்க தேர் செய்யப்பட்டுள்ளது.

    30. சித்தூர் மற்றும் காணிப்பாக்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அழகாக தமிழ் பேசுகிறார்கள். தமிழில் கேள்வி கேட்டால் புரிந்து கொள்கிறார்கள். எனவே மொழி பிரச்சினை ஏற்படுமோ என்ற தயக்கம் தேவை இல்லை.

    Next Story
    ×