search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராகு கால பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும்
    X

    ராகு கால பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும்

    • துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம்.
    • ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம்.

    துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம். அப்படி ஓர் அபூர்வக் கோயிலாக திருச்சியில் பாலகரை எனுமிடத்தில் துர்க்கைக்கு ஓர் ஆலயம் உள்ளது. ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம் இது.

    கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது ஆலயம். முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம் வரவேற்க உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம் இறைநாமம் எதிரொலிக்க விசாலமாக இருக்கிறது.

    மகாமண்டபத்தின் மேல்புறம் பெரியண்ணசுவாமி, கருப்பண்ண சுவாமி திருமேனிகள் காட்சிதர, வடதிசையில் மதுரைவீரன், பொம்மி, வெள்ளையம்மான் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் சுதை வடிவில் அமைந்துள்ளனர். துவார சக்திகள். அன்னைக்குக் காவலாக இருப்பதால் கம்பீரமும், அதே சமயம் பக்தர்களுக்குத் தடையில்லை எனும்விதமாக கருணையும் ஒரே சேர அமைந்துள்ளனர்.

    கருவறையில் இறைவி துர்க்கையம்மன், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறான். அன்னைக்கு நான்கு திருக்கரங்கள். இடது மேல் கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும் தாங்கி கீழ் வலது கரதத்தில் சூலத்தை ஏந்தி கீழ் இடது கரத்தில் பாச முத்திரை காட்டி மகிஷனின் சிரசின்மேல் நின்ற கோலத்தில் இளநகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. சிவ, விஷ்ணு சின்னங்கள் இவள் கரத்தில் ஒருசேர அமைந்து இருப்பது சிறப்பு.

    பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் தலமரம் ஒன்றிருக்கும். சில கோயில்களில் இரண்டு மரங்களும் இருப்பதுண்டு. ஆனால், இக்கோயிலில் தலமரமாக ஐந்து மரங்கள் உள்ளன.

    பிராகாரத்தில் தெற்கே வினாயகர் திருமேனி மிகப் பெரிய அளவில் உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையும் கிழக்கில் நாகர்கள், அய்யனார் திருமேனிகளும் அமைந்துள்ளன.

    இறைவியின் கருவறை விமானத்தைக் சுற்றி அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடுநாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒருபுறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகின்றது.

    இந்த அமைப்பு தனது ஆலயத்தில் தன் சகோதரனான கிருஷ்ணருக்கும் துர்க்கையன்னை இடமளித்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி சிலிர்க்கச் செய்கிறது.

    பங்குனி மாத மூன்றாவது ஞாயிறு தொடங்கி மூன்று நாட்கள் துர்க்கை அன்னைக்கு மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறும். தைமாதம் மிருகசீரிஷம், நட்சத்திரத்தின்போது அன்னை வீதியுலா வருவதுண்டு. அதற்கு முன்தினம் அன்னைக்கு ஏகதின லட்சார்ட்சனை நடத்துகின்றனர்.

    கன்னி பெண்களுக்கு இந்த துர்க்கை அம்மன் கண் கண்ட தெய்வமாக விளங்குவதாக சொல்கின்றனர்.

    ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொண்டு தேவியை வழிபடும் கன்னியர்க்கு அந்த ஏழு வாரங்களுக்குள்ளாவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறதாம். அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி மாங்கல்ய பாக்கியம் பெற்ற பக்தைகள் பலர் இதை சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

    Next Story
    ×