search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பெரியபாளையம் தல வரலாறு
    X

    பெரியபாளையம் தல வரலாறு

    • புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
    • சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

    பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள்.

    பெண்களின் கையில் வளையல் பொட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.

    ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார்.

    சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை.

    அப்பொது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.

    ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்டநேரம் பொராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை.

    அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த பொது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பவானி அம்மன் தோன்றினாள்.

    `நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு' என்று உத்தரவிட்டாள்.

    திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார்.

    பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார்.

    அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள்.

    பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.

    அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து பொனது.

    இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது.

    உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது.

    இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

    தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம். இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரிய பாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம் களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.

    Next Story
    ×