search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?
    X

    எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?

    • சத்ரு சம்ஹார யாகம்.
    • ஆஞ்சநேயருக்கு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    மண்ணுலகில் மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.

    கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.

    தோல்வி என்பதையே கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு திரும்புகிறான். ஆனால் அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.

    தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.

    எதற்கு? ராம லெட்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.

    அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.

    ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.

    காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால் ராவணா... உன்னை வெல்ல எந்த சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.

    ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது விபீஷணுக்கு தெரியும்.

    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?

    உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான். ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.

    இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.

    சத்ரு சம்ஹார யாகம் செய்ய, அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.

    யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில் போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.

    அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை அழைத்தார். வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன் சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.

    ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

    தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.

    காக்கும் தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.

    சுதர்சனத்தின் வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.

    சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.

    அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    ஆனால் மயில் ராவணன் யார்?

    பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.

    பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.

    இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன். அவனை உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.

    அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.

    அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.

    அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.

    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து தருகிறேன். இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.

    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.

    மயில் ராவணனை வென்று சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.

    Next Story
    ×