search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரமாண்டமான ஆலயம்
    X

    பிரமாண்டமான ஆலயம்

    • விஜயநகர மன்னர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.
    • சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார்.

    காணிப்பாக்கம் விநாயகர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டபோது அந்த ஊர் மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே சுயம்பு இருந்த இடத்தை சுற்றி சிறு குடில் அமைத்து நித்யபூஜை மற்றும் வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

    சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார். பக்தர்கள் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்தார். பக்தர்கள் நினைத்து வந்த காரியங்கள் நடந்தன.

    இதனால் சுயம்பு விநாயகர் புகழ் ஆந்திரா முழுவதும் பரவியது. மக்கள் அலை, அலையாக காணிப்பாக்கம் நோக்கி வரத்தொடங்கினார்கள். 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்து வந்த முதலாம் குலோத்துங்கசோழ மன்னனுக்கு இதுபற்றி தெரியவந்தது.

    சோழ மன்னர் தன் படைகள் புடைசூழ காணிப்பாக்கம் சென்றார். சுயம்பு விநாயகரை கண்டு தரிசனம் செய்தார்.

    அப்போதே அவர் உள்ளத்தில் சுயம்பு விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றியது. உடனே சிறு கருவறை அமைப்புடன் கருங்கல்லால் கோவில் எழுப்பினார்.

    அந்த ஆலயத்தில் காணிப்பாக்கம் பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

    1336-ம் ஆண்டு காணிப்பாக்கம் பகுதி விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாறியது. சுயம்பு விநாயகரை நேரில் வந்து வணங்கிய விஜயநகர மன்னர்கள் அந்த கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.

    அது மட்டுமின்றி சுயம்பு விநாயகர் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் காணிப்பாக்கம் கோவிலுக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டி விரிவுபடுத்தப்பட்டது.

    அதன்பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் காணிப்பாக்கம் கோவில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. சுயம்பு விநாயகரின் அற்புதங்களையும், அருளையும் கண்டு ஆங்கிலேயர்கள் பிரமித்தனர்.

    பூஜை முறைகளுக்கு அவர்கள் பரிபூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் கோவில் விரிவாக்கம் பணிகளில் அவர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு காணிப்பாக்கம் விநாயகர் புகழ் நாடெங்கும் நாலாபுறமும் பரவியது. எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் காணிப்பாக்கம் வரத்தொடங்கினார்கள்.

    மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பிறகே கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் ஆலய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த விரிவாக்க பணிகளுக்காகவே கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அந்த இடங்களில் கோவிலுக்கான மேம்பாட்டு பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன.

    இதனால் இந்த ஆலயம் தற்போது பிரமாண்டமான ஆலயமாக மாறி வருகிறது. கோவிலை சுற்றிலும் வாகன நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக 100 அடி ரோடு அமைத்துள்ளனர்.

    கோவில் பிரதான பாதை தொடங்கும் பகுதியில் சேவா டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதை வாங்கி செல்லத் தொடங்கியதும் ஒரு விநாயகரை காணலாம். அங்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள் (இதன் அருகில்தான் கோவில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது).

    இதையடுத்து கோவில் எதிரில் உள்ள புனித குளத்துக்கு சென்று புனிதநீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். சில பக்தர்கள் அந்த இடத்தில் நின்று தீபம் ஏற்றி சுயம்பு விநாயகரை வழிபடுகிறார்கள்.

    நாம் அதை கடந்து முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே செல்லாம்.

    கொடிமரம், பலிபீடம் உள்ள பகுதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் இருபக்கமும் கட்டணத்துக்கு ஏற்ப வழிபாடு 'கியூ'க்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நம் வசதிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி செல்லலாம். இலவச தர்ம வரிசையும் உண்டு.

    கருவறையில் சுயம்பு விநாயகரை நிதானமாக தரிசனம் செய்யலாம். வேகமாக செல்லுங்கள் என்று ஊழியர்கள் குரல் கொடுப்பார்களே தவிர யாரும் உங்கள் கையைப்பிடித்து இழுத்து வெளியில் விடமாட்டார்கள். எனவே சுயம்பு விநாயகரை கண்குளிர கண்டு தரிசனம் செய்யலாம்.

    மகாமண்டபத்துக்குள் வரிசையில் செல்லும் போதே சுயம்பு விநாயகர் நம் கண்களுக்கு காட்சி கொடுத்து விடுவார். எனவே கவலைகள் தீர அவரை நேரில் தரிசனம் செய்தபடி வேண்டலாம்.

    சுயம்பு தோன்றிய இடத்தை சுற்றி தற்போதும் பள்ளம் இருப்பதையும் எனவே சுயம்பு விநாயகரை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதையும் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

    சுயம்பு விநாயகரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் வழியிலேயே ரூ.50 மற்றும் ரூ.100-க்கு லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

    இதையடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துவழிபாடு செய்யலாம். ஒரே பிரகாரம்தான். பிரகாரத்தில் கண்ணாடி மண்டப அரங்கில் சித்தி-புத்தியுடன் உற்சவர் கணபதி உள்ளார். இந்த கண்ணாடி மண்டபத்தை நடிகர் மோகன்பாபு கட்டிக் கொடுத்துள்ளார்.

    அந்த கண்ணாடி மண்டபம் பின்புறம் வில்வமரம் உள்ளது. அந்த மரத்தடியில் நாகம்மன் உள்ளார். அவரை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.

    பிரகாரத்தில் ஐம்பொன் விநாயகர் சிலைகள் ஒரு தனி சன்னதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இடதுபக்கம் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. வலது பக்கம் நவக்கிரக சன்னதி உள்ளது. வேறு எந்த சன்னதியும் கிடையாது. மொத்தமே 4 இடத்தில்தான் வழிபாடு நடப்பதால் சில நிமிடங்களில் தரிசனம் செய்து முடித்து விட முடியும்.

    ஒரே ஒரு பிரகாரத்தை சுற்றி பிரமாண்டமாக கருங்கற்கலால் சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. மண்டபங்கள் அமைக்க வசதியாக இந்த சுற்றுசுவர் கட்டுப்பட்டுள்ளது. இதுகோவிலை மிகவும் பெரிதாக, பிரமாண்டமாக காட்டுகிறது.

    எதிர்காலத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தால், அதை சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு கட்டிட பணிகள் நடப்பது பாராட்டுக்குரியது.

    Next Story
    ×